தமிழ்நாடு

பேச்சுவார்த்தைக்கு வருமாறு போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு தமிழக அரசு மீண்டும் அழைப்பு

Published On 2024-01-05 07:24 GMT   |   Update On 2024-01-05 07:30 GMT
  • 9-ந்தேதி வேலைநிறுத்தப்போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் இன்று அறிவித்துள்ளனர்.
  • போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், செயலாளருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

சென்னை:

அரசு போக்குவரத்து கழகத்தில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 8 ஆண்டுகளாக வழங்கப்படாத அகவிலைப்படி உயர்வை வழங்க வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வருகிற 9-ந்தேதி முதல் 'ஸ்டிரைக்' நடத்த உள்ளனர்.

பொங்கலுக்கு முன்பாக இந்த ஸ்டிரைக் நடத்தப்பட உள்ளதால் பயணிகள் பாதிக்காமல் இருப்பதற்காக அனைத்து ஊழியர்களும் விடுமுறை எடுக்காமல் பணிக்கு வர வேண்டும் என்று போக்குவரத்து கழகங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதையடுத்து 9-ந்தேதி வேலைநிறுத்தப்போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் இன்று அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், செயலாளருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

இதைத்தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு வருமாறு போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு தமிழக அரசு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது. 

அதன் அடிப்படையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் இன்று மதியம் பல்லவன் இல்லத்தில் போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால், போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த அறிவிப்பு வாபஸ் பெறப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News