தமிழ்நாடு செய்திகள்

பொன்முடிக்கு 3 ஆண்டு ஜெயில்: அரசியலில் தி.மு.க.வை புரட்டிப்போடும் தீர்ப்பு- அண்ணாமலை கருத்து

Published On 2023-12-21 13:06 IST   |   Update On 2023-12-21 14:03:00 IST
  • ஊழல் இல்லாத சமுதாயத்தை படைப்பதற்கு இந்த தீர்ப்பு படிக்கல்லாக அமையும்.
  • இதே பட்டியலில் இன்னும் சில அமைச்சர்கள் இருக்கிறார்கள்.

அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைத்திருப்பது பற்றி தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கூறியதாவது:-

கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து அப்பீல் செய்யப்பட்டு கடைசியாக தீர்ப்பு வந்துள்ளது. கொஞ்சம் தாமதமாக வந்தாலும் நல்ல தீர்ப்பு. தமிழக பா.ஜனதா சார்பில் வரவேற்கிறோம்.

இதன்மூலம் ஊழல் இல்லாத சமுதாயத்தை படைப்பதற்கு இந்த தீர்ப்பு படிக்கல்லாக அமையும். ஏற்கனவே ஊழல் வழக்கில் சிக்கி செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக புழல் ஜெயிலில் இருக்கிறார். இந்தியாவே பார்த்து கொண்டிருக்கிறது.

இப்போது தி.மு.க.வின் மூத்த அமைச்சர் பொன்முடி தண்டனை பெற்றுள்ளார். இதே பட்டியலில் இன்னும் சில அமைச்சர்கள் இருக்கிறார்கள். இது ஆரம்பம்தான். அடுத்த ஆண்டு மத்தியில் இன்னும் சிலருக்கும் தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

இந்த தீர்ப்பை பொறுத்தவரை தனிப்பட்ட மனிதரின் பாதிப்பு ஆகாது. தி.மு.க.வின் அரசியலையே புரட்டி போடும் தீர்ப்பு இது. நீதிமன்றத்தையும் ஆளும் கட்சியையும் சம்பந்தப்படுத்தி பேசுபவர்கள் அரசியலில் இருக்கவே லாயக்கில்லாதவர்கள்.

பா.ஜனதாவில் சேருபவர்கள் மட்டும் விமோசனம் அடைவதாக கூறுவது தங்கள் மீதான பிரச்சினைகளை மக்களிடம் இருந்து திசை திருப்புவதற்குத்தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரஸ் சட்டமன்ற குழுத்தலைவர் கு. செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. கூறியதாவது:-

பொன்முடி சுப்ரீம் கோர்ட்டில் தன் தரப்பு வாதத்தை முன் வைத்து விடுதலை பெறுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவர் ஓடி ஒளிய கூடியவர் அல்ல. பல வழக்குகளை தி.மு.க. பார்த்து இருக்கிறது. எனவே இந்த வழக்கையும் எதிர் கொள்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News