தமிழ்நாடு

தமிழகத்தில் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம் செய்வார்- செல்வப்பெருந்தகை

Published On 2024-03-17 07:49 GMT   |   Update On 2024-03-17 07:49 GMT
  • தேர்தல் பத்திரங்களில் அரசியல் கட்சிகள் பெற்ற நிதிகள் குறித்து விவரங்களை வெளியிட வேண்டும் என்று போராட்டம் நடத்தியது காங்கிரஸ் கட்சிதான்.
  • எங்கள் மடியில் கனமில்லை. எனவே எங்களுக்கு பயமில்லை.

ஆலந்தூர்:

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று காலை சென்னையில் இருந்து மும்பை புறப்பட்டு சென்றார்.

முன்னதாக அவர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக ராகுல் காந்தி தமிழ்நாட்டில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறார். தமிழ்நாட்டின் எல்லாப் பகுதிகளுக்கும் ராகுல் காந்தி பிரசாரம் செய்வதற்கான ஏற்பாடுகள் இருக்கிறது. இன்று மும்பையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை சந்தித்து அதற்கான சுற்றுப்பயணத் திட்டங்கள் வகுக்கப்படும்.

தேர்தல் பத்திரங்களில் அரசியல் கட்சிகள் பெற்ற நிதிகள் குறித்து விவரங்களை வெளியிட வேண்டும் என்று போராட்டம் நடத்தியது காங்கிரஸ் கட்சிதான். எங்கள் மடியில் கனமில்லை. எனவே எங்களுக்கு பயமில்லை. இதனால்தான் நாங்கள் தைரியமாக அதை வெளியிடச் சொல்லி வலியுறுத்தினோம். இப்போது ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டு இருக்கிறது. வருமானவரி சோதனை, அமலாக்கத்துறை சோதனை, சி.பி.ஐ. சோதனை ஆகியவற்றுக்கு பின்னர் நிதிகளைப் பெறுகின்றனர். இதில் பெருமளவு உள்நோக்கங்கள் உள்ளன. தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் மோடி இதற்கெல்லாம் பதில் சொல்வாரா?


முதல் கட்டத்திலேயே தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடக்கப்போகிறது என்பது, மோடிக்கு எப்படி முதலாவது தெரிந்தது? அதனால் தான் அவர் தமிழ்நாட்டை மையமாக வைத்து முதலில் தொடர்ந்து பிரசாரம் செய்து கொண்டு இருந்தாரா?. இதையெல்லாம் பார்க்கும் போது பாராளுமன்ற தேர்தலை, தேர்தல் ஆணையம் சுதந்திரமாக சுயமாக நடத்துகிறதா? இல்லையேல் மோடிக்கு ஆதரவாகவா என்ற சந்தேகம் மக்களுக்கு எழுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News