தமிழ்நாடு செய்திகள்

'ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு' - பொங்கல் திருநாளில் திமுகவை சீண்டிய மாணிக்கம் தாகூர்

Published On 2026-01-15 10:06 IST   |   Update On 2026-01-15 10:06:00 IST
  • ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்பது காங்கிரஸ் தொண்டர்களின் விருப்பமாக இருக்கிறது.
  • 2014 இல் தனியாக நின்று திமுக பெற்ற வாக்கு சதவிகிதம் 23.9% தான். அதாவது 24% கூட இல்லை.

ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என்று பொங்கல் திருநாளில் காங்கிரஸ் ஏம்.பி. மாணிக்கம் தாகூர் திமுகவை சீண்டி ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில், "தை பிறந்தால் வழி பிறக்கும்.. ஆட்சியில் பங்கு என்பது என்ன என்பதை நாம் அறிய ஒரு மாடல்.

கேரளாவின் UDF மாடல். கூட்டணி அரசியல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான நம்பிக்கையான பாதையை காட்டுகிறது.

காங்கிரஸ் தலைமையேற்கிறது — ஆனால் அதிகாரம் குவிக்கப்படவில்லை; பகிரப்படுகிறது.

நட்பு +பங்கு. இதுவே UDF அரசியலின் அடித்தளம்.

UDF-ல் நாங்கள் தேர்தலை ஒன்றாகவே எதிர்கொள்கிறோம். பரஸ்பர நம்பிக்கையும், ஒரே அரசியல் நோக்கமும் அவர்களின் பலம்.

முக்கியமானது — தேர்தல் முடிந்ததும் கூட்டணிக்கு "பை-பை" சொல்லுவதில்லை. தேர்தலில் கூட்டாளிகள், ஆட்சியிலும் பங்கு பெறும் கூட்டாளிகளே.

அமைச்சர் பதவிகளும் முக்கிய துறைகளும் பலத்தையும், உடன்பாட்டையும், பொறுப்பையும் அடிப்படையாகக் கொண்டு பகிரப்படுகிறது — ஆட்சி ஆதிக்கத்திற்காக அல்ல.

IUML, Kerala Congress (M), RSP உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் நிதி, கல்வி, பொதுப்பணித்துறை, தொழில், சமூக நலன், நீர்வளம் போன்ற முக்கிய அமைச்சகங்களை பொறுப்புடன் நிர்வகித்தன.

இது பெயருக்கான பங்கீடு அல்ல. கூட்டணிக் கட்சிகள் மைய துறைகளை நிர்வகித்து, முடிவெடுத்து, முழுப் பொறுப்பையும் ஏற்றன.

முக்கிய கொள்கை முடிவுகள் UDF ஒருங்கிணைப்பின் மூலம், கேரளாவின் சமூக-அரசியல் பல்வகைமையை மதித்து எடுக்கப்பட்டன.

தேர்தலுக்குப் பின் துரோகம் இல்லை. வாக்குகள் எண்ணப்பட்டதும் கூட்டணியை ஒதுக்கும் அரசியல் இல்லை. இதுதான் UDF மாடலின் வித்தியாசம்.

UDF மாடல் = கூட்டணி தர்மம் செயல்பாட்டில். ஒன்றாகப் போராடு. ஒன்றாக ஆட்சி செய். ஒன்றாக மக்களுக்கு வழங்கு.

இந்த ஜனநாயகமான UDF மாடல் 2026-லும் வெற்றி பெற வேண்டும். தை பிறந்தால் வழி பிறக்கும்.. நல்ல ஆட்சியாக மாறட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர் பகிர்ந்த மற்றொரு பதிவில், "தை பிறந்தால் வழி பிறக்கும். அனைத்து தமிழ் பெருங்குடி மக்களுக்கும் எனது இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்பது காங்கிரஸ் தொண்டர்களின் விருப்பமாக இருக்கிறது. அப்படி கேட்பதே குற்றம், ஆர். எஸ். எஸ் மனப்பான்மை என்கின்றனர் திமுக தோழர்கள். முக்கியமாக திமுக ஆன்லைன் வாரியர்ஸ். காங்கிரஸ் நன்றி இல்லாமல் பேசுகிறது என்று சொல்கிறார்கள்! சிரிப்பாய் தான் வருகிறது.

நாங்கள் தான் தலைவர் ராகுல் காந்தி அவர்களை பிரதமர் வேட்பாளராக அறிவித்தோம் மற்ற கூட்டணி கட்சிகள் அதை செய்ய முன்வரவில்லை என்கிறார்கள். ஆனால் ஒரு முக்கியமான விஷயத்தை வசதியாக மறந்து விடுகிறார்கள் .

2016 இல் தங்களுக்கு மந்திரி பதவிகள் வேண்டும், தாங்களும் அதிகாரத்தில் அமர வேண்டும் என முடிவு செய்து மக்கள் நல கூட்டணி ஆரம்பித்து தேமுதிக தலைவர் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்து இப்போதைய திமுக கூட்டணி கட்சிகளான மதிமுக, விசிக , சிபிஎம், சிபிஐ , மற்றும் தமாகா தனித்து நின்ற போது, "திமுக தலைவர் கலைஞர் அவர்களை தான் முதல்வராக ஆக்க வேண்டும்" என்று திமுகவிற்கு உற்ற துணையாக தோழனாக இருந்து களம் கண்டது காங்கிரஸ் பேரியக்கம் மட்டும் தான். உடன் சின்ன கட்சிகளான முஸ்லீம் லீக் மற்றும் மனித நேய மக்கள் கட்சி மட்டுமே இருந்தது.

அதிமுக 136 சீட்டுகளுடன் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்ந்தது. அப்போது அதிமுக கூட்டணி பெற்ற வாக்கு சதவீதம் 40.9%

திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு 98 சீட்டுகளுடன் பெற்ற வாக்கு சதவீதம் 39. 4%.

அதிமுக கூட்டணி- திமுக கூட்டணி வித்தியாசம் வெறும் 1.5% தான்.

திமுக பெற்ற வாக்கு சதவீதம் 31.39% (காங்கிரஸ் IUML மமக கூட்டணி). இதே தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வாக்கு சதவீதம் 6.47%

ம.ந.கூ பெற்ற சீட்டுகள் 0 தான். 6 கட்சிகள் ஒன்றாக சேர்ந்து பெற்ற வாக்கு சதவீதம் 19.6%

2014 முதல் 2016 காலகட்டத்தில் காங்கிரஸ் மிகப்பெரிய வீழ்ச்சியில் இருந்த போது கூட பெற்ற வாக்குகள் 6.47%

2014 இல் தனியாக நின்று திமுக பெற்ற வாக்கு சதவிகிதம் 23.9% தான். அதாவது 24% கூட இல்லை.

2016 இல் அனைத்து கூட்டணி கட்சிகளும் கலைஞர் அவர்களை கைவிட்ட போதிலும் அவர் தான் எங்களின் முதல்வர் வேட்பாளர் என்று சொல்லி காங்கிரஸ் அவரை கை விடாமல் உடன் நின்றது . ஆகவே நன்றி விசுவாசம் பற்றி எங்களுக்கு யாரும் வகுப்பெடுக்க தேவையில்லை. இதனை ஆன்லைன் உடன்பிறப்புகள் உணர வேண்டும். எழுதும் போது பொறுப்புணர்ந்து கண்ணியம் குறையாமல் எழுதுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News