தமிழ்நாடு

மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை- பிரேமலதா விஜயகாந்த்

Published On 2024-03-29 07:23 GMT   |   Update On 2024-03-29 07:23 GMT
  • கோவையில் ஏராளமான சிறு, குறு தொழிற்சாலைகள் அதிகளவில் உள்ளன.
  • தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.

கோவை:

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று கோவை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து பிரசாரம் செய்தார். சிங்காநல்லூரில் திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:-

கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கோவை தென்னிந்தியாவின் மான்செஸ்டராக உள்ளது. கோவை மாநகராட்சி மற்ற மாநகராட்சிக்கு எல்லாம் முன்னுதாரணமாக சிறந்த மாநகராட்சியாக விளங்கியது. ஆனால் தற்போது அந்த நிலைமை மாறி விட்டது.

கோவை என்றதுமே சிறுவாணி தண்ணீர் தான் நினைவுக்கு வரும். ஆனால் இன்று அப்படிப்பட்ட கோவை நகரில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. 20 நாளைக்கு ஒருமுறை தான் தண்ணீர் வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்தது. ஒன்றும் இல்லை.

கோவையில் ஏராளமான சிறு, குறு தொழிற்சாலைகள் அதிகளவில் உள்ளன. இதன் மூலம் ஏராளமானோர் வேலை வாய்ப்பினை பெற்று வந்தனர். தற்போது சிறு, குறு தொழில்கள் முடங்கி உள்ளது.

இதற்கு மத்திய, மாநில அரசுகளே காரணம். மத்திய அரசு கொண்டு வந்த ஜி.எஸ்.டி.யால் பல சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது. மின்சார கட்டணத்தையும் மாநில அரசும் மத்திய அரசும் சேர்ந்து உயர்த்தி விட்டன. இதனால் தொழில் பாதிக்கப்பட்டு, அதன் மூலம் வேலைவாய்ப்பை பெற்று வந்த பலரும் வேலை வாய்ப்பினை இழந்துள்ளனர்.

மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்தன. ஆனால் ஒன்றையுமே நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.

இந்த நிலைமை எல்லாம் மாற கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். அவரது குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News