தமிழ்நாடு

அ.தி.மு.க. பிடிக்கவில்லை என்றால் விலகிக் கொள்ளுங்கள்- அண்ணாமலைக்கு சி.வி.சண்முகம் பதில்

Published On 2023-06-13 08:05 GMT   |   Update On 2023-06-13 08:05 GMT
  • ஊழலை பற்றி பேச தமிழக பாரதிய ஜனதாவுக்கு எந்த தகுதியும் இல்லை.
  • இந்தியாவிலேயே ஊழலுக்காக ஒரு கட்சியின் தலைவர் தண்டிக்கப்பட்டார் என்றால் அது பாரதிய ஜனதா தலைவர்.

சென்னை:

அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை இந்த பொறுப்புக்கு வந்த பிறகு இதுவரை எந்த அரசியல்கட்சித் தலைவர்கள் மீதும் இல்லாத அளவுக்கு அவரது கட்சி நிர்வாகிகளே பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை அவர் மீது கூறிவருகிறார்கள்.

சமுதாயத்தில் சாராயம் விற்பவர்கள், கற்பழிப்பு, ஏமாற்றி பணம் மோசடி செய்தவர்களுக்கு எல்லாம் பணம் பெற்றுக்கொண்டு இவர்களுக்கு பதவி கொடுக்கும் அண்ணாமலை எங்களது ஆளுமை மிக்க புரட்சித் தலைவியை பற்றி விமர்சிக்கிறார். இதற்கு அவருக்கு எந்த அருகதையும் இல்லை.

ஊழலை பற்றி பேச தமிழக பாரதிய ஜனதாவுக்கு எந்த தகுதியும் இல்லை. இந்தியாவிலேயே ஊழலுக்காக ஒரு கட்சியின் தலைவர் தண்டிக்கப்பட்டார் என்றால் அது பாரதிய ஜனதா தலைவர். இதை அண்ணாமலைக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

அப்போது இவர் கட்சியில் இல்லை. இன்றைக்கு ஊழலை பற்றி பேசுகிறார். உலகத்திலேயே 40 சதவீதம் கமிஷன் பெற்ற ஒரு கட்சியின் முதலமைச்சர் ஆட்சி எது என்றால் இவர் கர்நாடகாவுக்கு பிரசாரம் செய்ய சென்றாரே அங்கு தான். தமிழகத்தில் பி.ஜே.பி. வளர்ந்து விட்டது என்கிறார். சொல்லிவிட்டு போங்கள் எங்களுக்கு கவலை இல்லை.

அ.தி.மு.க.தான் தமிழகத்தில் மிகப்பெரிய இயக்கம். அதன் தலைமையிலான கூட்டணி தொடரும். இது பிரதமரின் விருப்பம் என்று டெல்லியில் அண்ணாமலையை வைத்துக்கொண்டு அமித்ஷா கூறியிருந்தார்.

உங்களுக்கு வீரம் இருந்திருந்தால் அன்றைக்கு அமித்ஷாவும், நட்டாவும் அ.தி.மு.க. தலைமையில் தான் கூட்டணி தொடரும் என்று கூறியபோது நீங்கள் மவுனமாக இருந்தது ஏன்? அந்த இடத்திலேயே கூட்டணி வைக்க மாட்டோம் என்று அண்ணாமலை கூறாதது ஏன்?

இன்றைக்கு எதற்காக அண்ணாமலை பேசுகிறார் என்றால் தமிழக பாரதிய ஜனதா தி.மு.க.வோடு கூட்டணி வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அண்ணாமலைக்கு பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்ற ஆசை இல்லை. அவர் தி.மு.க.வின் பி. 'டீம்' ஆக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

அதற்கு பல்வேறு உதாரணங்களை சொல்ல முடியும். அ.தி.மு.க. பிடிக்கவில்லை என்றால் போய் விடுங்கள். எங்களை ஏன் பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டிருக்கிறீர்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியதாவது:-

ஜெயலலிதா குறித்து மீண்டும் விமர்சனம் செய்தால் கடுமையான பதிலடி கொடுப்போம். பலரும் தெரிவிக்கும் விமர்சனங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. பா.ஜனதா கூட்டணியை மறுபரிசீலனை செய்ய நேரிடும்.

தன்னை முன்னிலைப்படுத்தும் வகையில் அண்ணாமலையின் செயல்பாடுகள் இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News