தமிழ்நாடு

புள்ளி விவரத்துடன் பேசுவதால் அண்ணாமலையை கண்டால் எதிர்கட்சியினருக்கு அச்சம்- சரத்குமார்

Published On 2024-04-14 08:36 GMT   |   Update On 2024-04-14 08:36 GMT
  • கடந்த 10 ஆண்டுகாலம் எந்த ஒரு ஊழல் குற்றச்சாட்டும் இல்லாமல், அப்பழுக்கற்ற ஆட்சியை பிரதமர் மோடி தந்துள்ளார்.
  • தங்களிடம் எந்த ஒரு திட்டமும் இல்லாததன் காரணமாகவே, உதயநிதி மற்றும் தி.மு.க, கூட்டணி கட்சியனர் பிரதமரை விமர்சித்து வருகிறார்கள்.

கோவை:

கோவை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து நடிகர் சரத்குமார் கோவை மணியகாரம்பாளையத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.

பா.ஜனதா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் மோடி என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்றே தெரியவில்லை. பொதுவாக எந்த ஒரு விளையாட்டாக இருந்தாலும் அதில் தலைவன் என்று ஒருவன் இருக்க வேண்டும். தலைவன் இல்லை என்றால் அதனை ஒரு போட்டியாகவே கருதமுடியாது.

அதுபோன்று தான் எதிர்கட்சிகளில் யார் பிரதமர் வேட்பாளர் என்றே தெரியாமல் பயனித்து கொண்டிருக்கிறார்கள். எதிர் கட்சிகளில் யார் தலைவர், பிரதமர் வேட்பாளர் என்று தெரியாத சூழ்நிலையில் அவர்களால் என்ன செய்ய முடியும் என்ற சூழலில் தான் இந்த தேர்தலை சந்திக்கிறோம்.

நல்லவர்கள், வல்லவர்கள், தொலைநோக்கு திட்டங்களுடன் செயல்படுவது தான் மோடியின் அரசு. கடந்த 10 ஆண்டுகாலம் எந்த ஒரு ஊழல் குற்றச்சாட்டும் இல்லாமல், அப்பழுக்கற்ற ஆட்சியை பிரதமர் மோடி தந்துள்ளார்.

50 ஆண்டுகாலமாக இந்தியாவில் ஆட்சி செய்த காங்கிரசிடம் ஏதாவது திட்டம் இருக்கிறதா? என்று கேட்டால் ஒன்றும் கிடையாது. ஆனால் பிரதமர் மோடி 10 ஆண்டுகளில் பல திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.

அடுத்து 3-வது முறையும் பிரதமராக மோடி தான் வருவார். பிரதமராக வந்ததும், அடுத்த 25 ஆண்டுக்கான திட்டங்களை இப்போதே தனது கையில் வைத்திருக்கிறார். அந்த திட்டங்களை நோக்கி அவரது பயணம் உள்ளது. இப்படி ஆட்சிக்கு வரும் முன்பே திட்டங்களை வகுத்து அதற்கு ஏற்ப செயல்படுகிறது பா.ஜ.க அரசு.

தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளிடம் எந்த திட்டமும் இல்லை. அதனால் தான் அவர்கள் எப்போது பார்த்தாலும் மோடியை விமர்சித்து வருகின்றனர். விமர்சிப்பவர்களுக்கு தனது செயல்கள் மூலம் அவர் பதிலடி கொடுத்து வருகிறார்.

தி.மு.க.வினர் மகளிர் உரிமை தொகை, விடியல் பயணம் உள்ளிட்டவற்றை கொடுப்பதாக கூறுகிறார்கள். அதனை அந்த கட்சியில் உள்ள அமைச்சர் மற்றும் எம்.பி ஒருவர் பெண்களை கொச்சைப்படுத்தும் விதமாக பேசி வருகிறார்கள்.

தி.மு.கவினர் மக்களுக்கு கொடுப்பது உரிமைக்காக அல்ல. உங்களுடைய வாக்குக்காக தான். அதனை கொடுத்து விட்டு ஏளனம் செய்வது தான் தி.மு.க.வின் வாடிக்கையாக உள்ளது.

தங்களிடம் எந்த ஒரு திட்டமும் இல்லாததன் காரணமாகவே, உதயநிதி மற்றும் தி.மு.க, கூட்டணி கட்சியனர் பிரதமரை விமர்சித்து வருகிறார்கள்.

அண்ணாமலை எந்த விவகாரமாக இருந்தாலும் புள்ளி விவரத்துடன் பேசுகிறார். அதனால் எதிர்கட்சிகள் அவரை பார்த்து பயப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News