தமிழ்நாடு செய்திகள்

ஆசிரியர்கள் மீதான அராஜகப் போக்கை அரசு உடனடியாக கைவிட வேண்டும் - இபிஎஸ்!

Published On 2025-12-26 18:58 IST   |   Update On 2025-12-26 18:58:00 IST
  • நான்கரை ஆண்டுகளாக ஆசிரியர்களை போராட விட்டு வேடிக்கை பார்க்கும் திமுக அரசின் பாசிசப் போக்கு வெட்கக்கேடானது.
  • பள்ளிக் கல்வித்துறை தலைமை அலுவலகம் முன்பு இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் போராட்டம்

சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் பல மாதங்களாகப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் இன்று (டிச. 26) சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வித்துறை தலைமை அலுவலகம் முன்பு இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர்.

இடைநிலை ஆசிரியர்களிடம் உள்ள ஊதிய முரண்பாட்டைக் கலைய வேண்டும் எனவும், 2021 சட்டமன்றத் தேர்தலையொட்டி திமுக கொடுத்த 311வது வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிடவும் முயன்றனர். இதனால் போலீசார் அவர்களை கைது செய்தனர். 

இந்நிலையில் ஆசிரியர்களின் இந்த கைதுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 

"திமுக அரசின் பொம்மை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021 தேர்தலின்போது அளித்த வாக்குறுதி எண் 311-ஐ நிறைவேற்றக் கோரி போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்களை ஸ்டாலின் மாடல் அரசின் காவல்துறை அராஜகப் போக்குடன் கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

"சம வேலைக்கு சம ஊதியம்" என்று வாய்கிழிய வாக்குறுதி அளித்துவிட்டு, நான்கரை ஆண்டுகளாக ஆசிரியர்களை போராட விட்டு வேடிக்கை பார்க்கும் திமுக அரசின் பாசிசப் போக்கு வெட்கக்கேடானது. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வக்கில்லை எனில், அதனை ஒப்புக்கொள்ளுங்கள் ஸ்டாலின் அவர்களே!

ஆசிரியர்கள் மீதான அராஜகப் போக்கை உடனடியாக கைவிட வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார். 


Tags:    

Similar News