தமிழ்நாடு

பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் ஆண்களை விட அதிக வாக்களித்து அசத்திய பெண்கள்

Published On 2024-04-21 15:08 GMT   |   Update On 2024-04-21 15:08 GMT
  • மொத்த வாக்குகள் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டன.
  • தமிழகத்தில் 4 கோடியே 33 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர்.

பாராளுமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடைபெற்றது. தமிழகம் மட்டுமின்றி நாடு முழுக்க 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரேதசங்களில் உள்ள 102 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது.

வாக்குப் பதிவின் போது மக்கள் எந்த அளவுக்கு வாக்களித்தனர் என்ற விவரங்களை தேர்தல் ஆணையம் தொடர்ச்சியாக வெளியிட்டு வந்தது. எனினும், வாக்களித்த விவரம் தோராயமாக வெளியிடப்பட்டதால், இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் தமிழகத்தில் பதிவான மொத்த வாக்குகள் பற்றிய விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

அதன்படி தமிழகத்தில் மொத்தமாக 69.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. தமிழகத்தில் அதிகபட்சமாக தருமபுரி மாவட்டத்தில் 81.48 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. தமிழகம் முழுக்க மொத்தமாக 4 கோடியே 33 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர்.

இதில் 2 கோடியே 12 லட்சம் வாக்காளர்கள் ஆண்கள் என்பதும், 2 கோடியே 21 லட்சம் வாக்காளர்கள் பெண்கள் என்பதும் தெரியவந்துள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் ஆண்களை விட பெண்கள் அதிகளவில் வாக்களித்துள்ளனர்.

Tags:    

Similar News