மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தை தொடங்குகிறார்கள்: தமிழக தேர்தல் களம் சூடுபிடித்தது
- பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் குறுகிய காலமே இருப்பதால் வேட்பாளர்கள் பம்பரமாக சுழன்று தேர்தல் பணியை மேற்கொள்ள தொடங்கி உள்ளனர்.
- பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலையின் பிரசாரம் தேர்தல் களத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை:
தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. தி.மு.க. தலைமையிலான கூட்டணி ஒரு அணியாகவும், அ.தி.மு.க. தலைமையில் இன்னொரு அணியும், பா.ஜ.க. தலைமையில் ஒரு அணியும் களத்தில் உள்ளன.
இந்த 3 அணிகளுக்கு இடையே சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. இப்படி தமிழக தேர்தல் களத்தில் நான்கு முனை போட்டி நிலவும் நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந் தேதி தேர்தல் நடைபெறும் நிலையில் வாக்குப்பதிவுக்கு இன்னும் 28 நாட்களே உள்ளன.
நேற்று வேட்பு மனுதாக்கல் தொடங்கியுள்ள நிலையில் வேட்பாளர்கள் மனு தாக்கல், பிரசாரம் என தீவிரமாக தேர்தல் களத்தில் இறங்கி பணியாற்ற தொடங்கி இருக்கிறார்கள். தேர்தல் காலம் என்பதால் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தங்களது கட்சியின் தலைமை அலுவலகங்களில் திரண்டு தேர்தல் பணிகளுக்கான முன்னேற்பாடுகளை சுறுசுறுப்பாக மேற்கொண்டு வருகிறார்கள்.
இதனால் அரசியல் கட்சிகளின் அலுவலகங்களில் திருவிழா கோலம் போல தொண்டர்களும், நிர்வாகிகளும் திரண்டு காணப்படுகிறார்கள்.
பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் குறுகிய காலமே இருப்பதால் வேட்பாளர்கள் பம்பரமாக சுழன்று தேர்தல் பணியை மேற்கொள்ள தொடங்கி உள்ளனர்.
தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வருகிற 26-ந் தேதி தூத்துக்குடியில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். அடுத்த மாதம் 17-ந் தேதி வரை அவரது சுற்றுப்பயண திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகிற 24-ந் தேதி திருச்சியில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். முதல் கட்ட பிரசாரத்தை வருகிற 31-ந் தேதி வரையில் அவர் மேற்கொள்கிறார். முதல் கட்ட பிரசாரம் முடிந்த பிறகு எடப்பாடி பழனிசாமியின் 2-வது கட்ட சுற்றுப்பயணமும் தயாராகி வருகிறது.
இதே போன்று மற்ற கட்சிகளின் தலைவர்களும் தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் சென்னையில் அனைத்து வேட்பாளர்களையும் ஒரே மேடையில் ஏற்றி வருகிற 23-ந் தேதி தேர்தல் பிரசாரத்தை பல்லாவரம் ரேடியல் சாலையில் தொடங்குகிறார்.
இப்படி அரசியல் கட்சிகளின் தலைவர்களும் முன்னணி நிர்வாகிகளும் தொண்டர்களும் தேர்தல் களத்தில் பரபரப்பாக இயங்க தொடங்கி இருக்கிறார்கள். அடுத்த வாரம் வேட்புமனு தாக்கல் முடிவடைந்த பிறகு தற்போது இருப்பதைவிட தேர்தல் களம் மேலும் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தலைவர்களின் அனல் பறக்கும் பிரசாரத்தால் தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில் இந்த தேர்தல் களத்தில் நான்கு முனைகளில் இருந்தும் பிரசார குரல் ஒலிக்க உள்ளது.
தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து தனது பிரசாரத்தின்போது வாக்கு சேகரிக்க உள்ளார்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தி.மு.க. அரசை கடுமையாக விமர்சித்து தனது தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ள உள்ளார்.
பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலையின் பிரசாரமும் தேர்தல் களத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுவரை தமிழகத்தை ஆண்ட 2 திராவிட கட்சிகளையும் விமர்சித்து அவரது பிரசாரம் இருக்கும். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் எப்போதும் போல மத்திய மாநில அரசுகளை விமர்சித்து தனது அனல் பறக்கும் பேச்சை கக்க உள்ளார்.
இப்படி தமிழக தேர்தல் களம் விறுவிறுப்படைந்து இருப்பதால் அனைத்து கட்சியின் தொண்டர்களுமே சுறுசுறுப்போடு தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டு இருக்கிறார்கள்.