தமிழ்நாடு செய்திகள்

திமுக அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்- டிடிவி தினகரன்

Published On 2024-07-16 18:45 IST   |   Update On 2024-07-16 18:45:00 IST
  • மத்திய அரசின் மீது பழியை சுமத்தி மக்களை திசைதிருப்பும் நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது.
  • அடிதடியும், அடாவடியுமே அடையாளமாக கொண்டிருக்கும் திமுகவிற்கு ஏன் வாக்களித்தோம் என எண்ணி வருந்தும் சூழலுக்கு தமிழக மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழகம் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக விளங்கும் வகையில் ஏழை, எளிய பொதுமக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை உருவாக்கி செயல்பாட்டிற்கு கொண்டு வந்ததோடு, வறுமைக் கோட்டிற்கு கீழ் எவருமே இருக்கக் கூடாது என்ற கொள்கைப் பிடிப்போடு அயராது பாடுபட்டவர் இதயதெய்வம் அம்மா அவர்கள்.

"எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கே இல்லாமை இல்லாத நிலை வேண்டும்" என்பதை லட்சியமாக கொண்டு வாழ்ந்த இதயதெய்வம் அம்மா அவர்களின் மறைவுக்கு பிறகு சுயநலமும், துரோக சிந்தனையும் கொண்ட பழனிசாமியின் ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேடுகளால் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த திமுக, தமிழக மக்களின் மீது எண்ணற்ற சுமைகளை ஏற்றி அவர்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது.

தேர்தல் நேரத்தில் வழங்கிய வாக்குறுதிகளையோ, மக்கள் நலத்திட்டங்களையோ செயல்படுத்தாத திமுக அரசு, அதற்கு மாறாக ஆட்சிக்கு வந்ததிலிருந்து மூன்றாவது முறையாக மின் கட்டணத்தை உயர்த்தியிருக்கிறது.

மின்சார உற்பத்தியை பெருக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசு, ஒவ்வொருமுறை மின்கட்டணத்தை உயர்த்தும் போதும் மத்திய அரசின் மீது பழியை சுமத்தி மக்களை திசைதிருப்பும் நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது.

ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றாண்டுகளில் திறனற்ற திமுக அரசின் நிர்வாகத் தோல்வியை மறைக்க,

• நூறு சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்த்தப்பட்ட சொத்துவரி

• அடிப்படை வசதிகளான குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டணம் உயர்வு

• ஆறுமுறை உயர்த்தப்பட்ட பால் மற்றும் பால்பொருட்களின் விலை உயர்வு

• விண்ணை முட்டும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு

• நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பு பலமடங்கு உயர்வு

• முத்திரைத்தாள் கட்டணம் உயர்வு

• மறைமுகமாக உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணம்

• அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும் சாலைவரி (Road Tax)

என எண்ணற்ற வரிகளையும், கட்டணங்களையும் உயர்த்தி ஏழை, எளிய பொதுமக்களின் மீது சுமைகளை ஏற்றுவது தான் திமுக அரசின் திராவிட மாடல் சாதனையா? நனவிலும் பதவி, கனவிலும் பதவி என பதவிப் பித்தர்களாக வலம் வந்து கொண்டிருக்கும் திமுகவினருக்கு மக்கள் படும் துன்பங்களும், வேதனைகளும் எப்படி புரியும்? என அனைத்து தரப்பு மக்களும் சிந்திக்க தொடங்கிவிட்டனர்.

அத்தியாவசியப் பொருட்கள் இல்லாத நியாய விலைக்கடைகள், உயிர்காக்கும் மருந்துகள் இல்லாத அரசு மருத்துவமனைகள், தமிழக அரசின் கீழ்மட்டத்திலிருந்து உயர்மட்டம் வரை எழுந்திருக்கும் ஊழல் மற்றும், முறைகேடு புகார்கள், நகரங்கள் தொடங்கி கிராமங்களின் கடைத்தெரு வரை வந்திருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களால் எதிர்காலத்தை இழக்கும் இளைய சமுதாயம், நாள்தோறும் அரங்கேறும் கொலை, கொள்ளை உள்ளிட்ட சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் என அடிதடியும், அடாவடியுமே அடையாளமாக கொண்டிருக்கும் திமுகவிற்கு ஏன் வாக்களித்தோம் என எண்ணி வருந்தும் சூழலுக்கு தமிழக மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இப்படி, அனைத்து துறைகளிலும் ஏற்பட்டுள்ள நிர்வாகத் தோல்விகளை மறைக்க வரிகளையும், கட்டணங்களையும் உயர்த்தி மக்கள் மீது சுமைகளை ஏற்றும் திமுக அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து வரும் 22.07.2024 (திங்கள் கிழமை) அன்று மாலை காலை 10.00 மணியளவில் தமிழகத்தின் அனைத்து வருவாய் மாவட்ட தலைநகரங்களிலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளன. சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் பங்கேற்று கண்டனப் பேரூரை ஆற்றவிருக்கிறார்கள்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டங்களில் அந்தந்த வருவாய் மாவட்டத்திற்குட்பட்ட தலைமைக்கழக நிர்வாகிகள், கழக அமைப்புச் செயலாளர்கள், மாவட்டக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், மாநில, மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள், நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழகம் மற்றும் சார்பு அணிகளின் செயலாளர்கள், நிர்வாகிகள், ஊராட்சி கழக செயலாளர்கள், வட்ட/வார்டு/கிளைக் கழக செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என அனைவரும் பெருந்திரளாக கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என கூறியுள்ளார்.

Tags:    

Similar News