தமிழ்நாடு

காங்கிரசுக்கு எத்தனை தொகுதி?: மு.க.ஸ்டாலினை சந்திக்க சென்னை வருகிறார் கார்கே

Published On 2024-03-03 08:46 GMT   |   Update On 2024-03-03 08:46 GMT
  • காங்கிரஸ்-தி.மு.க. தொகுதி உடன்பாடு காண்பதில் இழுபறி நிலவுகிறது.
  • வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்திற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து காங்கிரசார் அழைக்கப்படுகிறார்கள்.

சென்னை:

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அடுத்த வாரம் சென்னை வருகிறார்.

சென்னை வரும் கார்கே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசுவார் என்று கூறப்படுகிறது.

காங்கிரஸ்-தி.மு.க. தொகுதி உடன்பாடு காண்பதில் இழுபறி நிலவுகிறது. கடந்த தேர்தலை விட குறைந்த எண்ணிக்கையில் தொகுதிகள் ஒதுக்க தி.மு.க. முடிவு செய்து இருப்பதால் உடன்பாடு ஏற்படவில்லை.

டெல்லி காங்கிரஸ் தலைவர்களும் தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை குழு தலைவருமான டி.ஆர்.பாலுவும் தொடர்ந்து பேசி வருகிறார்கள்.

தொகுதி பிரச்சனையால் இந்தியா கூட்டணிக்கு சிக்கல் வந்துவிடக்கூடாது என்பதிலும் அதே நேரம் தொகுதி எண்ணிக்கையில் பிடிவாதமாகவும் காங்கிரஸ் உள்ளது.

இந்த நிலையில் காங்கிரஸ் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் கார்கே கலந்து கொள்ள ஏற்பாடுகள் நடக்கிறது. இதற்கான இடத்தேர்வு நடக்கிறது.

வருகிற 10-ந் தேதியில் இருந்து 15-ந் தேதிக்குள் இந்த கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளார்கள். இந்த கூட்டத்தில் பங்கேற்க வரும் கார்கே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசுகிறார்.

அதற்குள் தொகுதி உடன்பாடு எட்டப்படும் என்று காங்கிரஸ் தலைவர்கள் நம்பிக்கையில் இருக்கிறார்கள்.

வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்திற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து காங்கிரசார் அழைக்கப்படுகிறார்கள். கூட்டத்துக்கு மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமை தாங்குகிறார்.

Tags:    

Similar News