தமிழ்நாடு

கல்லால் தாக்கி மாமனார் கொலை: கேரளாவில் பதுங்கி இருந்த மருமகன் கைது

Published On 2023-12-12 04:16 GMT   |   Update On 2023-12-12 04:16 GMT
  • கூலி தொழிலாளியான சரவணன் தனலட்சுமியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை அடித்து துன்புறுத்தி வந்தார்.
  • விசாரணை நடத்திய போது சரவணன், மருதையை கல்லால் தாக்கி கொலை செய்து உடலை அங்கு வீசி சென்றது தெரிய வந்தது.

சேலம்:

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நாகியம்பட்டி ஆண்டிக்குட்டைய சேர்ந்தவர் மருதை (வயது 60) இவர் தனது மகள் தனலட்சுமியை கடநத 15 ஆண்டுகளுக்கு முன்பு கெங்கவல்லி அருகே உள்ள உலி புரம் புங்கமரத்துக்காடு பகுதியை சேர்ந்த சரவணன் (40) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். இவர்களுக்கு 12 மற்றும் 5 வயதில் 2 மகள்களும், 9 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

கூலி தொழிலாளியான சரவணன் தனலட்சுமியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை அடித்து துன்புறுத்தி வந்தார். நேற்று முன்தினம் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்த சரவணன் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கினார். இதனால் கோபித்து கொண்டு தனலட்சுமி நாகியம்பட்டியில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றார்.

அன்று இரவு 10 மணியளவில் நாகியம்பட்டி சென்ற சரவணன் தனது மாமனார் மருதையிடம் மனைவியை தன்னுடன் அனுப்புமாறு கூறினார். நீ சந்தேகப்பட்டு அடிப்பதால் அவளை உன்னுடன் அனுப்ப முடியாது, நீ இங்கிருந்து சென்று விடு என்று கூறினார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து அவர் தகராறு செய்ததால் அருகில் கிடந்த கம்பை எடுத்து பின்னால் விரட்டியுள்ளார். அதன் பிறகு அவர் திரும்பி வரவில்லை.

இந்நிலையில் நேற்று அங்குள்ள அய்யப்பன் கோவில் அருகில் இருக்கும் ஆலமரத்தின் அடியில் மருதை பிணமாக கிடந்தார். இதனை பார்த்த அந்த பகுதியினர் கொடுத்த தகவலின் பேரில் தம்மம்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்திய போது சரவணன், மருதையை கல்லால் தாக்கி கொலை செய்து உடலை அங்கு வீசி சென்றது தெரிய வந்தது.

போலீசார் சரவணனை தேடிய போது தலைமறைவானதும், கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் பின்னூர் பகுதியில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் அவரை கைது செய்தனர்.

அப்போது அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது-

எனது மனைவி என்னுடன் கோபித்து கொண்டு அவரது தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டாள். அவளை நான் அழைக்க சென்றபோது எனது மாமனார் மருதை என்னை அடித்து விரட்டினார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் காட்டுப்பகுதியில் வைத்து அவரை கல்லால் தாக்கினேன், இதில் காயம் அடைந்த அவர் இறந்துவிட்டார், அங்கிருந்து தப்பி கேரளா சென்றேன், ஆனால் போலீசார் என்னை கைது செய்துவிட்டனர்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News