தமிழ்நாடு

போதைப்பொருள் கடத்தியதாக 2 மாதங்களில் 470 பேர் கைது: பிரதமர் புகாருக்கு தமிழ்நாடு அரசு விளக்கம்

Published On 2024-03-05 02:59 GMT   |   Update On 2024-03-05 03:01 GMT
  • இந்த ஆண்டு இதுவரையில் போதைப்பொருள் வழக்குகளில் தொடர்புடைய 25 குற்றவாளிகள் பல்வேறு கோர்ட்டுகளால் தண்டிக்கப்பட்டு உள்ளனர்.
  • மாணவர்கள் இடையே போதைப்பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்த 73 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடத்தப்பட்டுள்ளன.

சென்னை:

சென்னை நந்தனத்தில் நேற்று நடைபெற்ற பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, தமிழ்நாட்டில் ஆளுங்கட்சி ஆதரவுடன் போதைப்பொருள் தங்கு தடையின்றி புழக்கத்தில் உள்ளது என்று பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தமிழ்நாடு அரசின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு மற்றும் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

போதை இல்லா தமிழகம் என்ற இலக்கை அடைவதற்கு தமிழ்நாடு போலீஸ்துறை, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு மற்றும் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் மற்றும் போலீசார் மாநிலம் முழுவதும் போதைப்பொருளை ஒழிக்க உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி ஆகிய 2 மாதங்களில் போதைப்பொருள், மனமயக்க பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 470 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக மொத்தம் 1,914 கிலோ கஞ்சா, 2 கிலோ மெத்தம்பெட்டமைன், 700 டேபண்ட்டால் 100 எம்.ஜி. மாத்திரைகள், 321 நைட்ரேசன் மாத்திரைகள், 2 ஆயிரத்து 20 டைடால் மாத்திரைகள் என ரூ.2.4 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள், 21 மோட்டார் சைக்கிள்கள், ஒரு ஆட்டோ, 6 கார்கள் போன்ற வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு இதுவரையில் போதைப்பொருள் வழக்குகளில் தொடர்புடைய 25 குற்றவாளிகள் பல்வேறு கோர்ட்டுகளால் தண்டிக்கப்பட்டு உள்ளனர். மேலும் போதைப்பொருள் வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களின் 6 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

சட்ட அமலாக்கம் தவிர, மாணவர்கள் இடையே போதைப்பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்த 73 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடத்தப்பட்டுள்ளன.

போதைப்பொருட்கள் மற்றும் மனமயக்க பொருட்களின் விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பான தகவல்களை கட்டணமில்லா உதவி எண்-10581, 94984 10581 என்ற 'வாட்ஸ் அப்' எண் அல்லது spnibcid@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News