செய்திகள்

கிரண்பேடி பற்றி தரக்குறைவான பேச்சு- தலைமை தேர்தல் ஆணையரிடம் நாஞ்சில் சம்பத் மீது புகார்

Published On 2019-03-28 11:35 GMT   |   Update On 2019-03-28 11:35 GMT
தேர்தல் பிரசாரத்தில் கவர்னர் கிரண்பேடியை தரக்குறைவாக பேசிய நாஞ்சில் சம்பத் மீது தலைமை தேர்தல் ஆணையரிடம் பாஜக மாநில பொதுச்செயலாளர் புகார் தெரிவித்துள்ளார். #BJP #kiranbedi #nanjilsampath

புதுச்சேரி:

புதுவை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து தி.மு.க. பேச்சாளர் நாஞ்சில்சம்பத் நேற்று புதுவையில் பிரசாரம் செய்தார். தவளகுப்பம் 4 முனை சந்திப்பில் தொடங்கி அரியாங்குப்பம், முதலியார் பேட்டை ஆகிய இடங்களில் காலையும், மாலையில் நகர பகுதியிலும் நாஞ்சில் சம்பத் திறந்தவெளி ஜீப்பில் சென்று பிரசாரம் செய்தார்.

தவளகுப்பம் 4 முனை சந்திப்பில் அவர் பேசும்போது, கவர்னர் கிரண்பேடியை பற்றி தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசினார். இதுதொடர்பாக பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன் புதுவை தலைமை தேர்தல் ஆணையர் கந்தவேலுவிடம் புகார் செய்தார்.

புகாருடன் நாஞ்சில் பேசியதற்கான ஆதாரமான சிடியையும் சமர்ப்பித்தார். இதைத்தொடர்ந்து மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி அருண், டி.ஜி.பி. சுந்தரிநந்தா ஆகியோரிடமும் புகார் செய்தார்.

இதுதொடர்பாக ரவிச்சந்திரன் கூறும்போது, நாட்டிலேயே முதல் ஐ.பி.எஸ். முடித்த பெண்மணியான கிரண்பேடி நாட்டின் சிறந்த பெண்மணி என பல விருதுகளை பெற்றுள்ளார். அவரைப்பற்றி தரக்குறைவாகவும், இழிவாகவும் தி.மு.க. பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பேசியுள்ளார்.

பெண்களை இழிவாக பேசுவதை தி.மு.க.வினர் வாடிக்கையாக வைத்துள்ளனர். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் செய்துள்ளேன். அகில இந்திய தேர்தல் ஆணையருக்கும் இதுதொடர்பான புகார் மனுவை அனுப்ப உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார். #BJP #kiranbedi #nanjilsampath

Tags:    

Similar News