செய்திகள்

பொது சின்னம் கிடைக்குமா?- தலைமை தேர்தல் ஆணையத்தை நாடுகிறது அமமுக

Published On 2019-03-26 07:11 GMT   |   Update On 2019-03-26 07:11 GMT
உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி வேறு ஒரு பொது சின்னத்தை ஒதுக்கும்படி தலைமை தேர்தல் ஆணையத்தை அமமுக அணுக உள்ளது. #LokSabhaElections2019 #LSPolls #TTVDhinakaran #PressureCookerSymbol
புதுடெல்லி:

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று நிறைவடைய உள்ள நிலையில், டிடிவி தினகரனின் அமமுக கட்சிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதேசமயம் வரும் தேர்தலில் அமமுக தரப்புக்கு பொது சின்னம் ஒதுக்குவது பற்றி பரிசீலிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

குக்கர் சின்னம் கிடைக்காதது டிடிவி தரப்புக்கு பின்னடைவாகவே கருதப்படுகிறது. அதேசமயம், உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலை ஏற்று வேறு பொது சின்னத்தை ஒதுக்குமாறு கூறியிருப்பதால் அதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தேர்தல் ஆணையம் ஆராய்ந்து வருகிறது.



இந்த  தீர்ப்பு குறித்து டிடிவி தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கூறுகையில், “அமமுகவின் 59 வேட்பாளர்களையும் சுயேட்சைகளாக கருதி ஒரே பொது சின்னம் ஒதுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. பொது சின்னம் வழங்கும்படி  உத்தரவிட்டிருப்பதன்மூலம், மகத்தான வெற்றியை பெற்றிருக்கிறோம். அமமுக போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர் பட்டியல் தரப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி, பொது சின்னம் ஒதுக்க தலைமை தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிடக்கோரி தேர்தல் ஆணையத்தை அணுக உள்ளோம்” என்றார்.

எனவே, பொது சின்னம் தொடர்பாக நல்ல முடிவு வரும் என்ற நம்பிக்கையில் அமமுக தலைமை உள்ளது. அமமுக வேட்பாளர்கள் அனைவரும் இன்று பிற்பகல் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய உள்ளனர். #LokSabhaElections2019 #LSPolls #TTVDhinakaran #PressureCookerSymbol
Tags:    

Similar News