பொங்கலை ஒட்டி சிறப்பு பேருந்துகளில் 3 நாட்களில் 3.58 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்
- பொங்கல் முடிந்து திரும்ப அவரவர் ஊர்களுக்கு செல்ல 16,17, 18, 19 ஆகிய 4 நாட்களில் கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பொதுமக்கள் எளிதாக எவ்வித சிரமம் இன்றி, இடையூறும் இன்றி, பயணம் செய்ய ஏதுவாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
அந்த வகையில், பொங்கல் பண்டிகைக்காக கடந்த 9-ந்தேதி முதல் நேற்று இயக்கப்பட்ட 8,270 பேருந்துகளில் 3 லட்சத்து 58 ஆயிரத்து 496 பேர் தங்களது சொந்து ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
பொங்கல் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் இதுவரை 2,38,535 பேர் முன்பதிவு செய்து பயணம் செய்துள்ளனர்.
அதேபோல், அனைத்து முக்கிய நகரங்களிலிருந்து அனைத்து நகர் பஸ்களும் பயணிகளின் பயன்பாட்டுற்கு ஏற்ப இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பொங்கல் முடிந்து திரும்ப அவரவர் ஊர்களுக்கு செல்ல 16,17, 18, 19 ஆகிய 4 நாட்களில் கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைக்கேற்ப கூடுதலாக பஸ்கள் இயக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.