மகாராஷ்டிராவில் இந்தியைத் திணித்தால் உதை விழும் - ராஜ் தாக்கரே எச்சரிக்கை
- மொழியும், நிலமும் பறிபோய்விட்டால் மராட்டியர்களின் கதை முடிந்தது
- மொழிக்காக மராட்டியர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
மும்பை மாநகராட்சித் தேர்தல் ஜன.15ஆம் தேதி நடைபெற உள்ளநிலையில், உத்தவ் தாக்கரேவின் சிவ சேனா மற்றும் ராஜ் தாக்கரேவின் நவநிர்மாண் சேனா கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.
பல ஆண்டுகளாகப் பிரிந்திருந்த தாக்கரே சகோதரர்கள் மீண்டும் கூட்டணியில் இணைந்துள்ளது மகாராஷ்டிரா அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், நேற்று தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, "மகாராஷ்டிர மாநிலத்தில் இந்தியை யாரேனும் திணிக்க முயன்றால், அவர்களுக்கு உதை விழும். மொழியும், நிலமும் பறிபோய்விட்டால் மராட்டியர்களின் கதை முடிந்தது. மொழிக்காக மராட்டியர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இது மராத்தியர்களுக்கான கடைசி தேர்தல். இன்று இந்த வாய்ப்பை நீங்கள் தவறவிட்டால், நீங்கள் முடித்துவிடுவீர்கள். மராத்தி மற்றும் மகாராஷ்டிராவுக்காக ஒன்றுபடுங்கள் இந்தி உங்களின் சொந்த மொழி அல்ல என்பதை, உ.பி, பீகார் மாநில மக்கள் உணர வேண்டும்" என்று தெரிவித்தார்.