ஜிப்ஸி படத்திற்கு 48 கட் கொடுத்தார்கள்... நான்தான் சென்சார் போர்டின் பிராண்ட் அம்பாசிடர் - ஜீவா
- 'தலைவர் தம்பி தலைமையில்' படம் வருகிற 15-ந்தேதி பொங்கலன்று வெளியாகிறது.
- நேற்று 'தலைவர் தம்பி தலைமையில்' பட ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
கடந்த 2024-ம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது 'ப்ளாக்' திரைப்படம். இப்படத்தை பாலசுப்பிரமணி கேஜி இயக்கியிருந்தார். ஜீவாவின் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க சாம்.சி எஸ் இசையமைத்திருந்தார். திரைப்படம் ஒரு டைம் லூப் கதையம்சத்தில் உருவாகி மக்களின் ஆதரவை பெற்றது.
இதனை தொடர்ந்து, ஜீவாவின் 45 ஆவது படமாக 'தலைவர் தம்பி தலைமையில்' உருவாகி உள்ளது. 'Falimy' படத்தை இயக்கி புகழ்பெற்ற இயக்குனர் நிதிஷ் சகாதேவ் இப்படத்தை இயக்கி உள்ளார். ராவண கோட்டம் படத்தை தயாரித்த கண்ணன் ரவி இப்படத்தை தயாரித்துள்ளார்.
அரசியல் கலந்த நகைச்சுவை படமாக உருவாகி உள்ள 'தலைவர் தம்பி தலைமையில்' படம் வருகிற 30-ந்தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளதாக படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில், வருகிற 15-ந்தேதி பொங்கலன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
விஜயின் ஜனா நாயகன் படம் தணிக்கை சான்றிதழ் பிரச்சினையாக நேற்று வெளியாகவில்லை. இது தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் வருகிற 21-ந்தேதி வரை ஒத்திவைத்துள்ளது. இந்த நிலையில்தான் ஜீவா படம் முன்னதாகவே ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று தலைவர் தம்பி தலைமையில்' பட ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய ஜீவா, "நான்தான் சென்சார் போர்டின் பிராண்ட் அம்பாசிடர். ஜிப்ஸி திரைப்படத்தில் 48 கட்கள் கொடுத்தனர். என்னைதான் சென்சார் போர்டு முதலில் செய்தார்கள் அவர்களோடு சேர்த்து கொரோனாவும் என்னை செய்தது" என்று கிண்டலாக தெரிவித்தார்.