செய்திகள்

நடந்து சென்று ஓட்டு கேட்ட மு.க.ஸ்டாலின் - செல்பி எடுக்க மாணவர்கள் ஆர்வம்

Published On 2019-03-23 08:24 GMT   |   Update On 2019-03-23 09:58 GMT
தர்மபுரியில் 4 ரோடு சந்திப்பு வழியாக உழவர் சந்தைக்கு சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விவசாயிகள், நடைபாதை வியாபாரிகளிடம் ஓட்டு கேட்டார். #LSPolls #MKStalin
தர்மபுரி:

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தர்மபுரி மாவட்டம் ஒடசல்பட்டி கூட்ரோட்டில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்றார். அதன் பிறகு தர்மபுரி நகருக்கு வந்து ஓட்டலில் தங்கி இருந்தார்.

இன்று காலை அவர் டி-சர்ட் மற்றும் பேன்ட் அணிந்து நடை பயிற்சி மேற்கொண்டார். ஓட்டலில் இருந்து புறப்பட்ட அவர், 4 ரோடு சந்திப்பு வழியாக உழவர் சந்தைக்கு சென்றார். அங்கு விவசாயிகளிடம் ஓட்டு கேட்டார்.

அப்போது விவசாயிகள் சிலர் தர்மபுரி மாவட்டத்தில் மழை இல்லாததால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் வெள்ளம் வந்தபோது அந்த நீர் தேவையில்லாமல் கடலில் கலந்தது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இருந்து நீரை பம்பிங் செய்து தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு நிரப்பி விவசாயிகளுக்கு பாசன வசதி ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதை அவர் பொறுமையுடன் கேட்டார். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை நீங்கள் செயல்படுத்தினாலும், அந்த திட்டத்தின் மூலம் தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் வரவில்லை என்றும் சிலர் கூறினர். அதையும் அவர் கேட்டுக்கொண்டார்.



அதன் பிறகு அங்குள்ள ஆவின் பாலகத்துக்கு வந்தார். அங்கு தொண்டர்களுடன் சேர்ந்து டீ சாப்பிட்டார். பின்னர் 4 ரோடு சந்திப்பு பகுதிக்கு வந்தார். அங்கு நடைபாதை வியாபாரிகளிடம் ஓட்டு கேட்டார். அதன் பிறகு நடந்து ஓட்டலுக்கு சென்றார். வழிநெடுக பெண்களும், மாணவர்களும், இளைஞர்களும் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். அவரும் மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் போஸ் கொடுத்தார்.

இன்று பிற்பகலில் அவர் அரூர் கச்சேரி மேட்டில் தி.மு.க. பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். முன்னதாக நேற்றும், இன்றும் அவர் விவசாயிகள், வியாபாரிகள் ஆகியோரிடம் கலந்துரையாடும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சிகள் திடீரென்று ரத்துசெய்யப்பட்டது. #LSPolls #MKStalin

Tags:    

Similar News