செய்திகள்

5.78 கோடி ரெயில் கொள்ளையில் கைது: சிபிசிஐடி போலீஸ் காவலில் கொள்ளையன் திடீர் மயக்கம்

Published On 2018-11-05 09:39 GMT   |   Update On 2018-11-05 09:39 GMT
5.78 கோடி ரெயில் கொள்ளையில் கைது செய்யப்பட்ட கொள்ளையனை சிபிசிஐடி போலீசார் விசாரணையின் போது திடீரென மயங்கி விழுந்ததையடுத்து உடனடியாக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். #SalemChennaiTrainRobbery #ChennaiTrainRobbery #RBIMoney

ராயபுரம்:

சேலத்தில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடந்த 2016-ம் ஆண்டு ரெயில் பெட்டி மேற்கூரையில் துளை போட்டு ரூ.5.78 கோடி கொள்ளையடிக்கப்பட்டது.

இந்த வழக்கில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த தினேஷ், ரோஹன்பார்த்தி ஆகிய 2 பேர் கடந்த 12-ந்தேதி கைது செய்யப்பட்டனர். மேலும் கொள்ளையில் தொடர்புடைய மோஹர்சிங், ருசிபார்த்தி, காலியா என்ற கிருஷ்ணா, மகேஷ்பார்த்தி, பில்தியா என்ற பிரஜ்மோகன் ஆகியோர் வேறொரு வழக்கில் கைதாகி அங்கு சிறையில் இருப்பது தெரிந்தது.

அவர்கள் 5 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். ரெயில் கொள்ளையில் மோஹர்சிங் தலைவனாக செயல்பட்டு இருந்தார்.

இதையடுத்து மோஹர் சிங், பில்தியா என்ற பிரஜ் மோகன் உள்பட 5 பேரையும் 14 நாள் காவலில் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் கோர்ட்டில் அனுமதி பெற்றனர். அவர்களிடம் எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. தலைமை அலுவலகத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு விசாரணையின் போது பில்தியா என்கிற பிரஜ்மோகன் திடீரென மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அவருக்கு ஆஸ்பத்திரியில் உள்ள 4-வது மாடியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவனது உடலில் சோர்வு ஏற்பட்டு இருப்பதாக தெரிகிறது. #SalemChennaiTrainRobbery #ChennaiTrainRobbery #RBIMoney

Tags:    

Similar News