கிரிக்கெட் (Cricket)

டி20 உலக கோப்பை: வங்கதேச போட்டியை நடத்த பாகிஸ்தான் விருப்பம்

Published On 2026-01-12 11:23 IST   |   Update On 2026-01-12 11:23:00 IST
  • தங்களது போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்றும் வங்க தேச கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியது.
  • இதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நிராகரித்தது.

இஸ்லாமாபாத்:

வங்க தேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல் சம்பவம் கிரிக்கெட்டிலும் எதிரொலித்து வருகிறது. ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா அணியில் இருந்து வங்காளதேச வீரர் முஸ்தாபிசுர் ரகுமான் நீக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணமாக 20 ஓவர் உலக கோப்பையில் இந்தியாவில் விளையாட மாட்டோம் என்றும், தங்களது போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்றும் வங்க தேச கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியது.

இதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நிராகரித்தது. இந்தியாவில் விளையாடாவிட்டால் புள்ளிகளை இழக்க நேரிடும் என்று எச்சரித்தது. ஆனாலும் இலங்கையில்தான் தாங்கள் விளையாடுவோம் என்று 2-வது முறையாக வங்க தேசம் ஐ.சி.சி.யிடம் வேண்டுகோள் விடுத்து இருந்தது. இது குறித்து ஐ.சி.சி. இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை.

இதற்கிடையே வங்க தேச அணி இந்தியாவில் விளையாடுவதற்கு ஏற்றவாறு சென்னை, ஐதராபாத் மாற்று இடமாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. அந்த அணி கொல்கத்தாவில் 3 போட்டியிலும், மும்பையில் ஒரு ஆட்டத்திலும் விளையாட திட்டமிடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பையில் வங்கதேச போட்டியை நடத்த தயாராக இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இலங்கையில் போட்டி நடத்த முடியாவிட்டால் நாங்கள் நடத்த தயார் என்று பாகிஸ்தான் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News