செய்திகள்
புதுவை காந்தி சிலை முன்பு தனது தந்தை படத்துடன் அமர்ந்து வாலிபர் தர்ணா போராட்டம் நடத்திய காட்சி.

ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்து வாலிபர் தர்ணா

Published On 2018-09-21 06:12 GMT   |   Update On 2018-09-21 06:12 GMT
ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்து புதுவை காந்தி சிலை முன்பு வாலிபர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். #RajivGandhiAssassination
புதுச்சேரி:

ராஜீவ்காந்தி கொலையாளிகளை விடுவிக்கக்கூடாது எனக்கூறி புதுவை கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகே இன்று வாலிபர் ஒருவர் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதுபற்றி அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். பெரியக்கடை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்ததற்கு பிறகு அவரை விடுவித்தனர்.

அந்த வாலிபர் புதுவை லாஸ்பேட்டையை சேர்ந்த ராஜ்குமார் (வயது 33) என்று தெரியவந்தது.



ராஜீவ்காந்தி குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட போது காஞ்சிபுரத்தை சேர்ந்த தர்மன் என்ற போலீஸ்காரர் உயிரிழந்தார். அவருடைய மகன்தான் ராஜ்குமார் என்றும் தெரிந்தது.

போராட்டம் தொடர்பாக ராஜ்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாங்கள் சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்தவர்கள். எனது தந்தை தர்மன் காஞ்சிபுரம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தார். ராஜீவ்காந்தி பாதுகாப்பு பணிக்காக ஸ்ரீபெரும்புதூர் சென்றிருந்தார்.

அப்போது அங்கு நடந்த குண்டுவெடிப்பில் அவர் உயிரிழந்துவிட்டார். எனது தாயார் பெயர் வேதவல்லி. எங்கள் பெற்றோருக்கு மலர்விழி, ராஜசேகர் மற்றும் நான் ஆகிய 3 குழந்தைகள்.

எனது தந்தை இறக்கும்போது எனது தாயாருக்கு 32 வயது. எனது அக்காள் மலர்விழிக்கு 12 வயது, அண்ணன் ராஜசேகருக்கு 11 வயது. நான் 8 வயது சிறுவனாக இருந்தேன்.

தந்தை திடீரென இறந்து விட்டதால் நாங்கள் சொல்ல முடியாத துயரங்களை சந்தித்தோம். மிகவும் கஷ்டப்பட்டோம். எங்கள் தாயாருக்கு படிப்பறிவு கிடையாது.

கருணை அடிப்படையில் வேலை பெற வேண்டும் என்பது கூட தெரியாது. தந்தை இறந்து 5 ஆண்டுகளுக்கு பிறகு எனது தாயாருக்கு வேலை கொடுத்தார்கள். அதை வைத்து கஷ்டப்பட்டு வளர்ந்தோம்.

தந்தை இல்லாத காரணத்தால் எங்களை சரியாக படிக்க வைக்கவில்லை. எனது அண்ணன் டிரைவராக இருக்கிறார். எனக்கும் சரியான வேலை இல்லை. 10 ஆண்டுகளுக்கு முன்பு புதுவை வந்த நான் இங்கு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன்.

அன்று எனது தந்தை இறந்த காரணத்தால் இன்று வரை எங்கள் குடும்பம் கடும் கஷ்டத்தில் உள்ளது. இதேபோல 13 குடும்பங்கள் அன்றைய குண்டுவெடிப்பில் குடும்ப தலைவரை இழந்து கஷ்டப்பட்டு கொண்டு இருக்கின்றனர்.

எனவே இதற்கு காரணமான கொலையாளிகளை விடுவிக்கக்கூடாது. அவர்கள் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது. முதலில் மரண தண்டனை வழங்கினார்கள். இப்போது ஆயுள் தண்டனை வழங்கி இருக்கிறார்கள்.

அவர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்கக்கூடாது. அப்படியானால் அப்பாவியான எங்கள் தந்தை போன்றவர்கள் உயிரிழந்ததற்கு யார் பொறுப்பு ஏற்பது.

இவ்வாறு அவர் கூறினார்.  #RajivGandhiAssassination


Tags:    

Similar News