செய்திகள்

ஸ்டாலினும், தினகரனும் மறைமுகமாக கூட்டணி வைத்துள்ளனர்- அமைச்சர் சிவி சண்முகம்

Published On 2018-09-17 05:27 GMT   |   Update On 2018-09-17 05:27 GMT
அ.தி.மு.க. ஆட்சியை கலைக்க ஸ்டாலினுடன் மறைமுகமாக தினகரன் கூட்டணி வைத்துள்ளதாக அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார். #ADMK #CVeShanmugam #MKStalin #TTVDhinakaran
விழுப்புரம்:

விழுப்புரம் நகர அ.தி.மு.க. சார்பில் மறைந்த தமிழக முன்னாள் முதல்- அமைச்சர் அண்ணாவின் 110-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் விழுப்புரம் மந்தக்கரை திடலில் நேற்று இரவு நடைபெற்றது.

கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதாவது:-

தமிழகத்தில் அ.தி.மு.க. சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறார். இந்த ஆட்சிக்கு தினகரனும், மு.க.ஸ்டாலினும் தொடர்ந்து அவப்பெயர் ஏற்படுத்தி வருகின்றனர்.

அ.தி.மு.க. ஆட்சியை கலைக்க ஸ்டாலினுடன் மறைமுகமாக தினகரன் கூட்டணி வைத்துள்ளார். அவர்களின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. 5 ஆண்டுகாலம் முழுமையாக ஆட்சி நடைபெறும். அதன் பின்னரும் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமையும்.

மு.க.ஸ்டாலினுக்கு முதல்-அமைச்சராக தகுதியும், ராசியும் கிடையாது. அவர் ஒருபோதும் தமிழகத்தின் முதல்வராக முடியாது. ஜெயலலிதாவால் போயஸ்கார்டன் மற்றும் கட்சியில் இருந்து விரட்டியடிக்கப்பட்டவர் தினகரன். இவர் தற்போது ஜெயலலிதா படத்தை வைத்து மக்களை ஏமாற்றி வருகிறார். அடுத்த தேர்தலில் மீண்டும் ஆர்.கே. நகரில் இவர் போட்டியிட்டு வெற்றிபெற முடியுமா?

முதல்-அமைச்சர் பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை ஏகவசனத்தில் வசைபாடி வருகிறார். ஒரு தலைவருக்கான தகுதி தினகரனுக்கு கிடையாது. தினகரன் கலந்து கொள்ளும் கூட்டங்களில் கூட்டம் சேருவதுபோல் ஒரு மாய தோற்றத்தை உருவாக்குகிறார்.

அ.தி.மு.க.வின் வரலாறு தெரியாமல் எம்.ஜி.ஆர். படத்துக்கு அருகில் கருணாநிதி படத்தை வைக்க வேண்டும் என ரஜினிகாந்த் பேசி வருகிறார். கருணாநிதியை எதிர்க்கவே அ.தி.மு.க. தொடங்கப்பட்டது. அவர் மறைந்தாலும் தி.மு.க.தான் அ.தி.மு.க.வுக்கு எதிரி. மீண்டும் அ.தி.மு.க.வின் பொற்கால ஆட்சி எப்போதும் தொடரும்.

இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார். #ADMK #CVeShanmugam #MKStalin #TTVDhinakaran
Tags:    

Similar News