செய்திகள்
கொள்ளை நடந்த வீடு

கீரனூரில் கணவன்-மனைவியை கட்டிப்போட்டு 20 பவுன் நகை, பணம் கொள்ளை

Published On 2018-09-06 11:17 IST   |   Update On 2018-09-06 11:17:00 IST
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் நள்ளிரவில் கணவன் மற்றும் மனைவியை கட்டிப்போட்டு 20 பவுன் நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
கீரனூர்:

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் உள்ள பரந்தாமன் நகரில் வசித்து வருபவர் காதர் மைதீன் (வயது 54). இவரது மனைவி சம்சாத்பேகம் (50). இவர்களது மகன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

நேற்று இரவு வழக்கம் போல் காதர் மொய்தீன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு 1 மணி அளவில் வீட்டின் முன்புள்ள இரும்பு கதவின் பூட்டு உடைக்கும் சத்தம் கேட்டு காதர் மொய்தீன் பதறி எழுந்தார். பின்னர் வெளியே வந்து பார்த்தார்.

அதற்குள் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்தனர். அவர்கள் அனைவரும் முகமூடி அணிந்திருந்தனர். இதில் ஒருவன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து காதர் மைதீனின் கழுத்தில் வைத்து அழுத்தினான். சத்தம் போட்டால் வெட்டி கொன்று விடுவதாக அவர்கள் மிரட்டியுள்ளனர்.

பின்னர் அவரின் கை, கால்களை கட்டிப் போட்டனர். மேலும் வீட்டின் உள்ளே தூங்கிக்கொண்டிருந்த சம்சாத் பேகத்தின் தலையில் கட்டையால் தாக்கினர். இதில் அவர் மயங்கினார்.

வீட்டில் நகை, பணம் எங்கு உள்ளது எனவும், பீரோ சாவியை தருமாறு கேட்டுள்ளனர். காதர் மைதீன் கூற மறுத்ததால் அவரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த பொருட்களை எடுத்து வெளியே வீசினர்.

பீரோவில் இருந்த நகை, பணம், செல்போன்கள் ஆகியவற்றை எடுத்துக்கொண்டனர். மேலும் காதர் மைதீனின் மோட்டார் சைக்கிளையும் திருடிக்கொண்டு அந்த கொள்ளை கும்பல் அங்கிருந்து தப்பியது.

பின்னர் கணவன்- மனைவி இருவரும் சத்தம் போட்டனர். அதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காதர் மைதீனின் வீட்டிற்கு வந்து பார்த்தனர். அப்போதுதான் இருவரையும் தாக்கி மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றதை அறிந்தனர்.

இது குறித்து கீரனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி. செல்வராஜ், கீரனூர் டிஎஸ்.பி. பிரான்சிஸ், இன்ஸ்பெக்டர் நாஞ்சில் உட்பட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது 3 பேர் கொண்ட கும்பல் எனவும், அவர்கள் வீட்டில் இருந்த 8 மோதிரம், கைச்செயின், சம்சாத் பேகம் கழுத்தில் கிடந்த 7½ பவுன் செயின் மற்றும் தோடு என மொத்தம் 20 பவுன் நகைகள், ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

கொள்ளையர்கள் தாக்கியதில் காயமடைந்த இருவருக்கும் கீரனூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து காதர் மைதீன் கூறுகையில், நள்ளிரவில் 3 பேர் கொண்ட கும்பல் திடீரென வீட்டிற்குள் புகுந்தது. அவர்கள் டவுசர்கள் மட்டும் அணிந்திருந்தனர். மேலும் முகத்தினை துணியால் மறைத்து கட்டியிருந்தனர். தன்னை தாக்கும்போது, ஒருவர் முகத்தில் இருந்த துணி விலகியது.

மேலும் போலீசார் காட்டிய கொள்ளையர்கள் படங்களில் 2 பேரை அடையாளம் காட்டியதாகவும் கூறினார்.
Tags:    

Similar News