செய்திகள்

திருப்பூரில் இன்று தொடங்க இருந்த நடிகர் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் ரத்து

Published On 2018-06-08 05:09 GMT   |   Update On 2018-06-08 05:09 GMT
கோவை, திருப்பூர், நீலகிரியில் தொடங்க இருந்த நடிகர் கமல்ஹாசனின் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #MakkalNeedhiMaiam #KamalHaasan
கோவை:

மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கிய நடிகர் கமல்ஹாசன் பல்வேறு மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து பொது மக்களை நேரில் சந்தித்து வருகிறார்.

கடந்த மாதம் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிந்த அவர் இளைஞர்கள், மாணவர்களுடன் உரையாடினார்.

இந்த சுற்றுப்பயணத்துக்கு பெரும் வரவேற்பு இருந்தது. அடுத்ததாக ஜூன் 8, 9, 10-ந் தேதிகளில் திருப்பூர், நீலகிரி, கோவை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பொது மக்களை சந்திக்கப் போவதாக அறிவித்திருந்தார். இதனால் கோவை மண்டலத்தில் உள்ள கமல் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

இந்த பயணத்தின் போது கோவையில் பொதுக்கூட்டத்தை நடத்தவும் திட்டமிட்டிருந்தனர். ஏற்கனவே கமல்ஹாசன் மதுரை, திருச்சியில் பொதுக்கூட்டங்களை நடத்தி இருந்தார்.

அந்த பொதுக்கூட்டங்களை விட கோவை பொதுக்கூட்டம் பிரமாண்டமாக இருக்கும் வகையில் கொடிசியாவில் பொதுக் கூட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் அவரது சுற்றுப் பயணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வராததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் கோவை, திருப்பூர், நீலகிரியில் கமல்ஹாசனின் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் கூறியதாவது:-

மக்கள் நீதி மய்யம் கட்சியின் வளர்ச்சி பணிகளில் தலைவர் தீவிரம் காட்டி வருகிறார். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கட்சிக்கு நிர்வாகிகள் நியமிப்பதற்காக நேர்காணல் சென்னையில் நடந்தது.

ஏற்கனவே கோவை மாவட்டத்தில் பெண் உறுப்பினர்கள் அதிக அளவில் சேர்ந்துள்ளனர். நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டு விட்டால் கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கையை மேலும் தீவிரப்படுத்த முடியும்.

விரைவில் உள்ளாட்சி தேர்தல் அதனை சந்திக்க தயாராகும் வகையில் கட்சிக்கு தேவையான அடிப்படை வேலைகளை செய்து வருகிறார். இதுபோன்ற பல்வேறு காரணங்களால் தான் அவரது கோவை மண்டல சுற்றுப்பயணம் தள்ளிப் போய் உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர். #MakkalNeedhiMaiam #KamalHaasan
Tags:    

Similar News