செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்

Published On 2018-05-25 08:11 GMT   |   Update On 2018-05-25 08:11 GMT
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளதாக மூத்த போலீஸ் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். #sterliteprotest
சென்னை:

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டம் வன்முறையானது. போலீஸ் துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள்.

போலீசாரின் நடவடிக்கைகள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. சாதாரண உடையில் வாகனத்தில் ஏறி நின்று போலீசார் துப்பாக்கியால் சுடுவது ஏன்? என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

இந்த நிலையில் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

சரியான திட்டமிடல் மற்றும் தலைமை இல்லாததே தூத்துக்குடியில் துப்பாக்கி சூடுக்கு வழிவகுத்துள்ளது. போலீசார் தங்களது அடையாளத்தை மறைத்தது ஏன்?. சாதாரண உடையில் உள்ளவர்கள் கூட்டத்தில் கலந்து உளவு பார்ப்பது கிடையாது.



போலீஸ்  உடையில் இருந்து போலீசார் ஆயுதத்தை பயன்படுத்துவதற்கும், சாதாரண உடையில் ஆயுதத்தை பயன்படுத்துவதற்கும் ஏராளமான வேறுபாடுகள் இருக்கின்றன. குறி பார்த்து திறமையுடன் சுடுபவர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபடுத்தப்பட்டு இருப்பது தொடக்க கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

கூட்டத்தை கலைப்பதை விட தங்களை பாதுகாத்து கொள்வதற்காக போலீசார் துப்பாக்கி சூட்டை நடத்தியது போல் தோன்றுகிறது.

கட்டுக்கடங்காத கும்பலை கட்டுப்படுத்த ஒரு முறை துப்பாக்கிச்சூடு, ஒரு பலியே போதுமானது. 12க்கும் மேற்பட்டோரை துப்பாக்கியால் சுட்டதை நியாயப்படுத்துவது ஆச்சரியமாக இருக்கிறது.

சுப்ரீம் கோர்ட்டின் வழி காட்டுதல்படி போலீசார் நடத்தும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் சி.பி.சி.ஐ.டி. மாற்றப்படும். அதன்படி இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்யப்படுகிறது. துப்பாக்கி சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டு தடயவியல் சோதனைக்கு உட்படுத்தப்படும்.

இவ்வாறு அந்த உயர் போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். #sterliteprotest

Tags:    

Similar News