செய்திகள்
அ.தி.மு.க.வினரால் உடைக்கப்பட்ட தெற்கு மாவட்ட செயலாளர் சேலஞ்சர்துரை காரை படத்தில் காணலாம்.

அ.தி.மு.க.-தினகரன் ஆதரவாளர்கள் பயங்கர மோதல்: 10 கார்கள் உடைப்பு

Published On 2018-05-18 04:45 GMT   |   Update On 2018-05-18 04:45 GMT
கோவையில் அ.தி.மு.க.வினர் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மோதி கொண்டனர். இது தொடர்பாக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உள்பட 60 பேர் கைது செய்யப்பட்டனர். #ADMK #TTVDhinakaran
வடவள்ளி:

கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

உக்கடம், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தொண்டாமுத்தூர் லட்சுமி நகரில் உள்ள வடவள்ளி பகுதி செயலாளர் கருப்பசாமி வீட்டில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. கூட்டம் முடிந்த பின்னர் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கோவை மாநகர தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சேலஞ்சர் துரை,புறநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ரோகிணி, அமைப்பு செயலாளர் கே.ஜி. சண்முகம், மகளிரணி செயலாளர் அன்னம்மாள் உள்ளிட்ட நிர்வாகிகள் 20-க்கும் மேற்பட்ட கார்களில் வடவள்ளி வந்து கொண்டிருந்தனர்.

வடவள்ளி மகாராணி அவென்யூ சாலையில் 100-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் திரண்டு இருந்தனர். அவர்கள் கார்களை வழி மறித்தனர்.

திடீரென தினகரன் ஆதரவாளர்கள் கார்கள் மீது சரமாரியாக கற்களை வீசினார்கள். மேலும் 10-க்கும் மேற்பட்ட கார்களின் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் கலவரம் போல் காணப்பட்டது. இரு தரப்பினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.

கல் வீச்சில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் 8 பேர் மற்றும் கார் டிரைவர் ஒருவர் என 9 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் வடவள்ளி ரமேஷ் குமார், ஜெரால்டு, அரி, நிலவேந்தன், தாமோதரன் ஆகியோர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


கார்கள் உடைக்கப்பட்டதை தொடர்ந்து மருதமலை ரோட்டில் உள்ள கருப்பராயன் கோவில் அருகே முன்னாள் எம்.எல்.ஏ. சேலஞ்சர் துரை தலைமையில் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உடைக்கப்பட்ட கார்களை நடுரோட்டில் நிறுத்தி மறியல் செய்தனர். இரவு 9 மணிக்கு தொடங்கிய மறியல் நள்ளிரவு 12 மணி வரை நீடித்தது.

சம்பவ இடத்துக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அனிதா, டி.எஸ்.பி.க்கள் வேல்முருகன், மணி, சண்முகய்யா மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.

அவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் மறியலில் ஈடுபட்டவர்கள் வாகனத்தை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை கலைந்து செல்ல மாட்டோம் என தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். முதலில் ரோட்டின் ஒரு பக்கம் மட்டும் மறியல் செய்தனர். பின்னர் இரு பக்கமும் ரோட்டில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள்.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சேலஞ்சர் துரை, ரோகிணி மற்றும் 6 பெண்கள் உள்பட 60 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களை கொளத்துப்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். இன்று காலை வரை அவர்கள் விடுவிக்கப்படவில்லை. இதனால் பதட்டம் நிலவி வருகிறது. கைது செய்யப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள திருமண மண்டபம் முன் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

அ.தி.மு.க.- டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் மோதி கொண்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து கோவை அவினாசி ரோட்டில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலை, அ.தி.மு.க. மாவட்ட தலைமை அலுவலகம், தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகம், ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகம் ஆகியவற்றுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.  #ADMK #TTVDhinakaran
Tags:    

Similar News