செய்திகள்
சாலையில் கவிழ்ந்து கிடந்த பஸ்.

புவனகிரி அருகே விபத்து- தாறுமாறாக ஓடிய பஸ் ரோட்டில் கவிழ்ந்து 37 பேர் படுகாயம்

Published On 2018-05-15 10:45 IST   |   Update On 2018-05-15 10:45:00 IST
புவனகிரி அருகே இன்று காலை தாறுமாறாக ஓடிய பஸ் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண்கள் உள்பட 37 பேர் படுகாயமடைந்தனர்.
புவனகிரி:

சிதம்பரத்தில் இருந்து கடலூர் நோக்கி தனியார் பஸ் ஒன்று இன்று அதிகாலை புறப்பட்டது. பஸ்சில் 45 பயணிகள் இருந்தனர். பஸ்சை திண்டிவனத்தை சேர்ந்த ராஜேஷ் (வயது33) ஓட்டி சென்றார்.

அந்த பஸ் புவனகிரியை அடுத்த கீழ்புவனகிரி திருவள்ளுவர் நகர் அருகே கடலூர்-சிதம்பரம் சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவர் ராஜேசின் கட்டுப்பாட்டை இழந்தது. ரோட்டில் தாறுமாறாக ஓடிய பஸ் சாலையோரம் கவிழ்ந்தது. பஸ்சில் இருந்த பயணிகள் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்.. என்று கூக்குரலிட்டனர். சத்தம் கேட்ட அந்த பகுதியை சேர்ந்த வாலிபர்கள், பெண்கள் அங்கு திரண்டனர். அவர்கள் பஸ்சின் இடிப்பாடுக்குள் சிக்கிய பயணிகளை மீட்டனர்.

இந்த விபத்தில் டிரைவர் ராஜேஷ் மற்றும் பெண்கள், குழந்தைகள் உள்பட 37 பயணிகள் பலத்த காயம் அடைந்தனர். டிரைவரின் கை துண்டானது. விபத்து குறித்து புவனகிரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பலத்த காயமடைந்த 37 பேரையும் சிதம்பரம் மற்றும் புவனகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. #Tamilnews
Tags:    

Similar News