கிரிக்கெட் (Cricket)

நியூசிலாந்து தொடரில் இடம் பெறும் முகமது ஷமி: கிரிக்கெட் வாரியம் பரிசீலனை

Published On 2025-12-31 17:40 IST   |   Update On 2025-12-31 17:40:00 IST
  • நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு முகமது ஷமி இடம் பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
  • 2027 உலககோப்பையை கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்படலாம்.

புதுடெல்லி:

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் முகமது ஷமி. 35 வயதான அவர் கடைசியாக கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடி இருந்தார்.

அதன் பிறகு காயம் மற்றும் பணிச்சுமை காரணமாக முகமது ஷமி இந்திய அணியில் இருந்து விலகி இருந்தார்.

இதற்கிடையே 2027-ம் ஆண்டு உலக கோப்பையில் முகமது ஷமியை சேர்ப்பது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ( பி.சி.சி.ஐ.) பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

முதல் கட்டமாக அவர் நியூசிலாந்துக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெற உள்ள ஒருநாள் தொடரில் இடம் பெற இருப்பதாக கூறப்படுகிறது. 10 மாதங்களுக்கு பிறகு அவர் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் கால்பதிக்க உள்ளார்.

இது தொடர்பாக பி.சி.சி. ஐ. வட்டாரங்கள் கூறியதாவது:-

முகமது ஷமி தேர்வு குழுவின் விவாதத்தில் தொடர்ந்து இருந்து வருகிறார். அவர் அணியை விட்டு முழுமையாக விலக்கப்படவில்லை. அவருடைய உடற்தகுதி மட்டுமே முக்கிய கவலையாக இருந்தது. ஆனால் தற்போது அவர் நல்ல உடற்தகுதியுடன் உள்ளார். ஷமி போன்ற அனுபவம் வாய்ந்த பந்து வீச்சாளர் அணிக்கு தேவை.

2027 உலககோப்பையை கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்படலாம். நியூசிலாந்து தொடரில் அவர் தேர்வு செய்யப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

முகமது ஷமி சமீபத்தில் நடைபெற்ற சையது முஷ்டாக் அலி 20 ஓவர் தொடரில் பெங்கால் அணிக்காக 7 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட் கைப்பற்றினார்.

விஜய் ஹசாரே கோப்பையில் 3 ஆட்டத்தில் 6 விக்கெட் வீழ்த்தினார். இந்த அபாரமான பந்து வீச்சால் தேர்வு குழுவினரை தனது பக்கம் திரும்ப வைத்து உள்ளார்.

முகமது ஷமி 2015, 2019, 2023 ஆகிய 3 உலக கோப்பையில் விளையாடி உள்ளார். 18 ஆட்டத்தில் 55 விக்கெட் கைப்பற்றி சர்வதேச வீரர்களில் 5-வது இடத்தில் உள்ளார்.

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையேயான 3 போட்டிக்கொண்ட ஒரு நாள் தொடர் வருகிற 11-ந் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடரில் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு முகமது ஷமி இடம் பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News