இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: இந்திய வீரர்களை வீட்டிற்கு அழைத்து பேசிய விராட் கோலி
- இந்திய அணியின் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் திடீரென ஓய்வு முடிவை அறிவித்தார்.
- இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 20-ம் தேதி தொடங்குகிறது.
லண்டன்:
இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி. இவர் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென ஓய்வு முடிவை அறிவித்தார். ஆனாலும், ஒருநாள் போட்டியில் தொடர்ந்து விளையாட இருக்கிறார்.
ஓய்வுபெற்ற போதிலும் இங்கிலாந்து தொடரில் இந்திய அணியின் நடவடிக்கைகளை விராட் கோலி கண்காணிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், லீட்சில் தொடக்க ஆட்டத்திற்கு சில நாட்களுக்கு முன் புதிய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில், துணை கேப்டன் ரிஷப் பண்ட், சிராஜ் மற்றும் சிலரை லண்டனில் உள்ள தனது வீட்டிற்கு விராட் கோலி அழைத்துள்ளார்.
கென்ட்டில் நடந்த அணிகளுக்கு இடையேயான போட்டி முடிந்ததைத் தொடர்ந்து திங்கட்கிழமை இந்தியாவுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. எனவே வீரர்கள் கோஹ்லியுடனான சந்திப்பிற்கு தயாராக இருந்தனர். இந்தச் சந்திப்பில் வரவிருக்கும் தொடர் பற்றிய பேச்சுவார்த்தைகள் முதல் கில் மற்றும் பண்ட் இளம் அணியை எவ்வாறு அணிதிரட்ட முடியும் என்பது வரை விவாதம் நடைபெற்றது என்றும், இந்த விவாதம் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது எனவும் தெரிகிறது.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 20-ம் தேதி லீட்சில் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.