ஐபிஎல் 2025: தொடர்ந்து 11 ஆட்டங்களில் 25 ரன்கள்-சாதனை படைத்த சூர்யகுமார் யாதவ்
- முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவரில் 217 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய ராஜஸ்தான் அணி 117 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
ஜெய்ப்பூர்:
நடப்பு ஐ.பி.எல். தொடரின் 50-வது லீக் ஆட்டம் ஜெய்ப்பூரில் நேற்று நடந்தது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ்அணிகள் மோதின.
முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவரில் 217 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணி 117 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் மும்பை அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் வீரர் சூர்யகுமார் யாதவ் இந்த ஆட்டத்தில் 48 ரன்கள் சேர்த்தார்.
நடப்பு தொடரில் களம் இறங்கிய 11 ஆட்டங்களிலும் சூர்யகுமார் யாதவ் 25 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். இதன்மூலம் ஐ.பி.எல்லில் தொடர்ந்து 11 ஆட்டங்களில் குறைந்தது 25 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.
இதற்கு முன் 2014-ம் ஆண்டில் ராபின் உத்தப்பா கொல்கத்தா அணிக்காக 10 ஆட்டங்களில் தொடர்ந்து 25 ரன் எடுத்ததே சாதனையாக இருந்தது.
நடப்பு ஐ.பி.எல்லில் சூர்யகுமாரின் ரன் எண்ணிக்கை 467 ஆக உயர்ந்தது. இதையடுத்து, அதிக ரன் குவிப்புக்காக வழங்கப்படும் ஆரஞ்சு நிற தொப்பியை குஜராத்தின் சாய் சுதர்சனிடம் (456 ரன்) இருந்து தட்டிப் பறித்தார்.