கிரிக்கெட் (Cricket)

சர்ச்சைக்குரிய வகையில் சைகை: பாகிஸ்தான் வீரர்களிடம் இன்று ஐ.சி.சி. விசாரணை

Published On 2025-09-26 15:33 IST   |   Update On 2025-09-26 15:33:00 IST
  • பாகிஸ்தான் வீரர்கள் ஹாரிஸ் ரவூப், பர்ஹான் ஆகியோர் ஆத்திரமூட்டும் சைகைகளில் ஈடுபட்டனர்.
  • விசாரணையில் ரவூப், பர்ஹான் தங்கள் காட்டிய சைகைகள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்.

துபாய்:

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் கடந்த 14-ந்தேதி நடந்த லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை இந்தியா தோற்கடித்தது.

இப்போட்டிக்கு பிறகு இந்தியாவின் வெற்றியை ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையில் ஈடுபட்ட ஆயுதபடைக்கு அர்ப்பணிப்பதாக சூர்யகுமார் யாதவ் கூறினார்.

மேலும் பகல்காம் தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்துக்கு வெற்றியை சமர்ப்பிப்பதாக தெரிவித்தார். இதுதொடர்பாக சூர்யகுமார் யாதவ் மீது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் ஐ.சி.சி.யிடம் (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) புகார் அளித்தது.

இதற்கிடையே இந்தியாவுக்கு எதிராக கடந்த 21-ந் தேதி நடந்த 'சூப்பர் 4' சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர்கள் ஹாரிஸ் ரவூப், பர்ஹான் ஆகியோர் ஆத்திரமூட்டும் சைகைகளில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக அவர்கள் மீது ஐ.சி.சியிடம் இந்திய கிரிக்கெட் வாரியம் புகார் செய்தது.

இதற்கிடையே சூர்யகுமார் யாதவிடம் ஐ.சி.சி விசாரணை நடத்தியது. அவரிடம் ஐ.சி.சி நடுவர் ரிச்சர்ட்சன் விளக்கம் கேட்டு விசாரணை நடத்தினார். இந்த விசாரணையில் இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை நிர்வாகி ஹேமான் அமின், இந்திய அணியின் மேலாளர் மல்லாபுர்க்கர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இந்த விசாரணையின்போது சூர்யகுமார் யாதவிடம், அரசியல் ரீதியாகக் கருதக்கூடிய எந்தவொரு கருத்தையும் தெரிவிப்பதைத் தவிர்க்குமாறு ஐ.சி.சி நடுவர் ரிச்சர்ட்சன் அறிவுறுத்தினார். இதில் தனது விளக்கத்தை சூரியக்குமார் பதிவு செய்தார்.

சூர்யகுமார் யாதவுக்கு எச்சரிக்கை மட்டும் விடுக்கப்படலாம் அல்லது போட்டிக் கட்டணத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்படலாம்.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் அளித்த புகார் தொடர்பாக பாகிஸ்தான் வீரர்கள் ஹாரிஸ் ரவூப், பர்ஹான் ஆகியோரிடம் ஐ.சி.சி இன்று விசாரணை நடத்துகிறது.

விசாரணையில் ரவூப், பர்ஹான் தங்கள் காட்டிய சைகைகள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். அவர்களது விளக்கம் நம்பத்தகுந்ததாக இல்லாவிட்டால், நடத்தை விதிகளின்படி அவர்கள் தடைகள் அல்லது கடுமையான தண்டனையை எதிர்கொள்ள நேரிடலாம்.

Tags:    

Similar News