கிரிக்கெட் (Cricket)

U19 உலக கோப்பை: முதல் போட்டியில் அமெரிக்காவை எளிதில் வீழ்த்தியது இந்தியா

Published On 2026-01-15 21:25 IST   |   Update On 2026-01-15 21:25:00 IST
  • முதலில் பேட்டிங் செய்த அமெரிக்கா 107 ரன்னில் சுருண்டது.
  • டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இந்தியாவுக்கு 96 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

19 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் இன்று தொடங்கியது. இந்தியா "பி" பிரிவில் இடம் பிடித்துள்ளது. இந்தியா இன்று தனது முதல் ஆட்டத்தில் அமெரிக்காவை எதிர்கொண்டது. டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய அமெரிக்கா ஹெனில் படேல் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 107 ரன்னில் சுருண்டது. அமெரிக்கா அணியால் 35.2 ஓவர்களை மட்டுமே தாக்குப்பிடிக்க முடிந்தது.

பின்னர் 108 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி 2 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார். இந்தியா 4 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 21 ரன்கள் எடுத்திருக்கும்போது வெளிச்சமின்மையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. பின்னர் மழை பெய்தது. இதனால் நீண்ட நேரம் ஆட்டம் தடைபட்டது.

மழை நின்றபின் மீண்டும் ஆட்டம் தொடங்கியது. அப்போது டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இந்தியாவுக்கு 37 ஓவரில் 96 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

வேதாந்த் திரிவேதி (2), ஆயுஷ் மாத்ரே (19), விஹான் மல்ஹோத்ரா (18) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அபிஜியான் கந்து ஆட்டமிழக்காமல் 41 பந்தில் 42 ரன்கள் சேர்க்க இந்தியா 17.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Tags:    

Similar News