விஜய் ஹசாரே டிராபி: அமன் மோகடே சதத்தால் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது விதர்பா
- முதலில் ஆடிய கர்நாடக அணி 49.4 ஓவரில் 280 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- அடுத்து ஆடிய விதர்பா அணி 284 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
பெங்களூரு:
விஜய் ஹசாரே டிராபி தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
லீக் சுற்றுகள் முடிவில் ஏ பிரிவில் முதல் இரு இடங்களைப் பிடித்த கர்நாடகம், மத்திய பிரதேசம், பி பிரிவில் உத்தர பிரதேசம், விதர்பாவும், சி பிரிவில் பஞ்சாப், மும்பையும், டி பிரிவில் டெல்லி, சவுராஷ்டிரா ஆகிய அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன.
காலிறுதி முடிவில் கர்நாடகா, சவுராஷ்டிரா, பஞ்சாப், விதர்பா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன.
இந்நிலையில், பெங்களூருவில் நடைபெற்ற முதல் அரையிறுதியில் கர்நாடகா, விதர்பா அணிகள் மோதின. டாஸ் வென்ற கர்நாடக அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய கர்நாடக அணி 49.4 ஓவரில் 280 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கருண் நாயர் 76 ரன்னும், கிருஷ்ணன் ஸ்ரீஜித் 54 ரன்னும் எடுத்தனர்.
விதர்பா அணி சார்பில் தர்ஷன் நல்கண்டே 5 விக்கெட்டும், யாஷ் தாக்குர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 281 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விதர்பா அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் அமான் மோகடே பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார். அவர் 138 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ரவிகுமார் சமர்த் 76 ரன்னும், துர்வ் ஷோரே 47 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில், விதர்பா அணி 46.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 284 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது. இதன்மூலம் நடப்பு சாம்பியன் கர்நாடக அணி தொடரில் இருந்து வெளியேறியது.
நாளை நடைபெற உள்ள 2வது அரையிறுதி போட்டியில் சவுராஷ்டிரா, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.