கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு ஏற்படும் சிறுநீர்க்குழாய் தொற்று பிரச்சனை
- எல்லா கர்ப்பிணி பெண்களுக்குமே 4-வது மாதத்தில் சிறுநீர் தொற்றுக்கான பரிசோதனை செய்ய வேண்டும்.
- சிறுநீர் பரிசோதனை நெகட்டிவ் ஆக வந்தால் ஒரு வாரம் காத்திருக்க வேண்டும்.
பெண்களை பொருத்தவரை கர்ப்ப காலங்களில் அவர்களுக்கு நிறைய சந்தேகங்கள் ஏற்படும். அவர்களில் பலரும் தங்களின் சந்தேகங்களை அவர்களது மருத்துவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வார்கள். அதேபோல் பெண்கள் பலருக்கும் கர்ப்பகாலத்தில் ஏற்படும் சிறுநீர்க்குழாய் தொற்று தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. என்னிடம் சிகிச்சை பெற வரும் கர்ப்பிணி பெண்கள் பலரும் சிறுநீர்க்குழாய் தொற்று பிரச்சனை தொடர்பான பலவித சந்தேகங்களை கேட்டுள்ளனர்.
கர்ப்பிணி பெண்களுக்கு சிறுநீர்க்குழாய் தொற்று எப்படி ஏற்படுகிறது?
அந்த வகையில் சிறுநீர்க்குழாய் தொற்று என்பது கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு ஏற்படும் முக்கியமான பிரச்சனைகளில் ஒன்றாகும். இதை பல பெண்களும் எதிர்கொள்கிறார்கள். சிறுநீர்க்குழாய் தொற்று பாதிப்புகள் எப்படி ஏற்படுகிறது? அதற்கான தீர்வுகள் என்ன என்பது பற்றி பார்க்கலாம்.
பெண்களின் கர்ப்பகாலத்தில் முதல் 3 மாதங்கள், நடுவில் உள்ள 3 மாதங்கள் மற்றும் கடைசியில் உள்ள 3 மாதங்கள் ஆகிய காலகட்டங்களை எடுத்துக் கொண்டால், கர்ப்ப காலத்தின் முதல் 3 மாதங்களில் சிறுநீர்க்குழாய் தொற்று என்பது மிகவும் பொதுவாக ஏற்படக்கூடிய ஒன்றாகும்.
ஏனென்றால் ஒரு பெண் கர்ப்பிணியாக இருக்கும் காலகட்டத்தில் கரு உருவான பிறகு அது வளரத் தொடங்கும். அந்த கருவானது பெரிதாக வளர வளர கர்ப்பப்பையும் பெரிதாகி விரிவடையும். சிறுநீர்க்குழாயும், கர்ப்பப்பையும் ஒன்றுக்கொன்று மிகவும் பக்கத்தில் இருக்கும். கர்ப்பப்பை விரிவடையும்போது சிறுநீர்க்குழாயும், கர்ப்பப்பையும் ஒன்றுக்கொன்று மிகவும் நெருக்கமாக காணப்படும்.
எனவே அதுபோன்ற கால கட்டத்தில் சிறுநீர்க்குழாய் தொற்றானது, கர்ப்பப்பையில் மிகவும் எளிதாக பரவுவதற்கான வாய்ப்புகள் உண்டு. அதோடு அந்த கர்ப்பப்பை வளர்ந்து பெரிதாகும்போது, சிறுநீர்க்குழாயில் ஏற்படும் அழுத்தம் காரணமாக கர்ப்பிணிகளுக்கு சிறுநீர்த்தேக்கம் என்பது அதிகம் இருக்கும்.
இந்த காலகட்டத்தில் பல பெண்களுக்கு கர்ப்பப்பை பின்னோக்கி சாய்ந்த நிலையில் காணப்படும். அப்படி சாய்ந்த நிலையில் கர்ப்பப்பை இருக்கும்போது, அது சிறுநீர்க்குழாய்க்கு அழுத்தத்தை கொடுக்கும். இதன் காரணமாக சிறுநீரானது திரும்பி செல்லும் நிலை ஏற்படும். இதனால் சிறுநீர்க்குழாயில் தொற்று உருவாகும்.
சிறுநீர்க்குழாய் தொற்று உருவாவதற்கான முக்கிய காரணங்கள்:
மேலும் இதற்கு முக்கிய காரணமே சிறுநீர்க்குழாய் மற்றும் யோனிப்பகுதி ஆகியவை கர்ப்பப்பையின் பக்கத்தில் இருப்பதுதான். அதனால் தான் கர்ப்பிணிகளுக்கு பல நேரங்களில் அறிகுறி எதுவுமே இல்லாமல் சிறுநீர்க்குழாய் தொற்று ஏற்படும். அறிகுறி இல்லாமல் சிறுநீர்க்குழாய் தொற்று எப்படி வரும் என்றால், பொதுவாக கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு காய்ச்சல் வரும், குளிர் ஜுரம் வரும், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்பது போல் தோன்றும். மேலும் அவர்கள் சிறுநீரை அடக்கமுடியாமல் சிரமப்படுவார்கள்.
இந்த அறிகுறிகளானது கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் பொதுவான அறிகுறிகள் என்பதால் கர்ப்பிணிகள் பலரும் இதை பெரிதாக கண்டு கொள்வதில்லை. ஆனால் சிறுநீர்க்குழாய் தொற்றுக்கும் இதே அறிகுறிகள் தான் என்பதை பெண்கள் கவனிக்க தவறி, தவறு செய்து விடுவார்கள். அதனால் தான் அவர்கள் சிறுநீர்க்குழாய் தொற்று பற்றி கவலைப்பட மாட்டார்கள்.
ஆனால் கர்ப்பிணி பெண்களுக்கு முதல் 3 மாதங்களில் சிறுநீர்க்குழாய் தொற்று அதிகரித்து காணப்படுவது மிகவும் பொதுவான விஷயம். ஆனால் சிலருக்கு எந்தவித அறிகுறியும் இல்லாமல் கர்ப்பகாலத்தில் சிறுநீர்க்குழாய் தொற்று ஏற்படும். பொதுவாகவே சிறுநீர்க்குழாயும், கர்ப்பப்பையும் மிகவும் பக்கத்தில் இருப்பதால், கர்ப்பப்பை வளரும்போது ஏற்படும் அழுத்தம் காரணமாக சிறுநீர் தேங்குவது என்பது அதிகம் இருக்கும். பல நேரங்களில் அதனால் சிறுநீர்க்குழாய் தொற்றானது அறிகுறி இல்லாமல் இருக்கும்.
எனவே தான் கர்ப்ப காலத்தில் ஏற்படுகிற சிறுநீர்க்குழாய் தொற்று பாதிப்பை அறிகுறியற்ற பாக்டீரியூரியா (ஏசிம்டமேட்டிக் பாக்டீரியூரியா) என்று சொல்கிறோம். அறிகுறியற்ற பாக்டீரியூரியா என்றால் இந்த காலகட்டத்தில் அறிகுறியே இல்லாமல் சிறுநீரில் தொற்றுக்கள் இருக்கும்.
டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701
சிறுநீர்க்குழாய் தொற்றுக்களை கண்டறிவதற்கான பரிசோதனை மற்றும் சிகிச்சை:
அதனால் தான் எல்லா கர்ப்பிணி பெண்களுக்குமே 4-வது மாதத்தில் சிறுநீர் தொற்றுக்கான பரிசோதனை செய்ய வேண்டும். மேலும் கூடவே ஒரு யோனி ஸ்வாப் பரிசோதனையும் செய்ய வேண்டும். இது பூஞ்சை மற்றும் பாக்டீரியா தொற்றுக்களை கண்டறியும் பரிசோதனை ஆகும். ஏனென்றால் அறிகுறியே இல்லாமல் தொற்றுக்கள் பரவும் நிலையில், இந்த தொற்றுக்களானது கர்ப்பப்பையில் இருக்கும் கருவையும் பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.
அதனால்தான் அறிகுறியற்ற பாக்டீரியூரியாவினால் நிறைய பெண்களுக்கு குறை மாதத்தில் குழந்தை பிறப்பது, குறை மாதத்தில் பனிக்குட நீர் உடைவது, குழந்தையின் எடை குறைவாக இருப்பது போன்ற பல்வேறு வகை பாதிப்புகள் அதிகமாக ஏற்படுகிறது என்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்ட ஒரு விஷயம் ஆகும்.
அதற்காகத்தான் எல்லா கர்ப்பிணிகளுக்கும் 4-வது மாதத்தில் ஒரு சிறுநீர் பரிசோதனை செய்வது அவசியமானதாகும். இந்த பரிசோதனையின்போது தொற்றுக்கள் இருப்பது கண்டறியப்பட்டால், அதற்கு குறிப்பிட்ட ஆன்டிபயாடிக் மருந்து கொடுத்து முழுமையாக சரிசெய்து விடுவோம். இதில் ஒரு லட்சம் தொற்றுக்கள் இருந்து, ஆனால் அதற்குரிய அறிகுறி இல்லாவிட்டால் கூட கண்டிப்பாக இவர்களுக்கு சிகிச்சை முறைகள் தேவைப்படும்.
கர்ப்பகாலத்தில் இந்த சிறுநீர்க்குழாய் தொற்றுக்கள் என்பது மிகவும் பொதுவானது. இதற்கு குறிப்பிட்ட மற்றும் பாதுகாப்பான ஆன்டிபயாடிக் எடுத்துக்கொள்வது நல்லது. இந்த காலகட்டத்தில் கர்ப்பிணிகள் பொதுவாக சிறுநீரை கட்டுப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அதிகமாக நீர்ச்சத்து உள்ள நீராகாரங்களை உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும். சிறுநீரை எளிதாக கழிப்பது போன்ற சூழல்களை உருவாக்கி்க கொள்ள வேண்டும். இதெல்லாம் ரொம்பவும் முக்கியமான விஷயம். இவை அனைத்தும் ஒவ்வொரு பெண்ணும் கர்ப்ப காலத்தில் கவனிக்க வேண்டிய விஷயம் ஆகும்.
எனவே கர்ப்பிணி பெண்கள் கண்டிப்பாக சிறுநீர்க்குழாய் தொற்று இருந்தால் மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டும். சிறுநீர்க்குழாய் தொற்றுக்கான மருந்துகள் மாத்திரைகள் எடுத்து முடித்த பிறகு, மீண்டும் ஒருமுறை சிறுநீர் தொற்று பரிசோதனை செய்ய வேண்டும். இதன் மூலம் அவர்களின் சிறு நீர்க்குழாய் தொற்று பிரச்சனை முழுமையாக சரியாவதை உறுதி செய்ய முடியும். அதன்பிறகு பின்நாட்களில் குழந்தைக்கு எந்தவித பாதிப்பும் வராமல் தடுக்க முடியும்.
பெண்கள் கர்ப்பத்தை உறுதி செய்ய சிறுநீர் பரிசோதனை எப்போது செய்ய வேண்டும்?
பெண்கள் பலரும் தாங்கள் கர்ப்பமாக இருக்கிறோமா என்பதை அறிந்து கொள்ள சிறுநீர் பரிசோதனை எப்போது செய்ய வேண்டும் என்பதில் அவர்களுக்கு சந்தேகம் இருக்கும். ஒரு பெண்ணுக்கு மாதவிலக்கு மாதாமாதம் சரியான நேரத்தில் வந்தால், மாதவிலக்கு தள்ளிப்போன ஒரே நாளில், அதாவது 31-வது நாளில் சிறுநீர் பரிசோதனை செய்யலாம்.
ஆனால் சில பெண்களுக்கு மாதவிலக்கு வருவது 35 நாட்கள் அல்லது 45 நாட்கள் என தள்ளித் தள்ளிப்போகும். ஆனால் எதுவாக இருந்தாலும் முதலில் அவர்கள் ஒரு சிறுநீர் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். சிறுநீர் பரிசோதனை நெகட்டிவ் ஆக வந்தால் ஒரு வாரம் காத்திருக்க வேண்டும்.
ஒரு வாரம் கழித்தும் மாதவிலக்கு வரவில்லை, ஆனால் நீங்கள் கருத்தரிப்பதற்கு முயற்சி செய்து இருக்கிறீர்கள் என்றால், கண்டிப்பாக மீண்டும் ஒரு வாரம் கழித்து சிறுநீர் பரிசோதனை செய்து கொள்ளலாம்.
தேவைப்பட்டால் சில நேரங்களில் ரத்த பரிசோதனையில், பீட்டா எச்.சி.ஜி. என்ற ரத்த பரிசோதனை செய்வது மிகவும் முக்கியமான ஒன்று. இந்த பீட்டா எச்.சி.ஜி. பரிசோதனை மூலமாக, கருவின் ஆரம்ப நிலையிலேயே அதனுடைய வளர்ச்சியை தெரிந்து கொள்ள முடியும். இது ஒரு முக்கியமான பரிசோதனை ஆகும்.
மாதவிலக்கு குறிப்பிட்ட காலத்தில் வராத பெண்கள் எப்போது கருமுட்டைகள் வெளியானதோ, அதில் இருந்து 17-வது நாள் சிறுநீர் பரிசோதனை செய்தால் பாசிட்டிவ் ஆக வர வாய்ப்பு இருக்கிறது. அதனால்தான் நாங்கள் எங்களிடம் வரும் பெண்களுக்கு, எந்த நாளில் முட்டை வெளியானதோ, அந்த நாளில் இருந்து 17-வது நாளில் சிறுநீர் பரிசோதனை செய்ய வேண்டும் என்று சொல்கிறோம்.
பொதுவாக ஐ.வி.எப். முறையில் செயற்கை கருத்தரிப்பு செய்கிற பெண்களுக்கு, கருவை கர்ப்பப்பையில் எடுத்து வைத்த பிறகு 15-வது நாள் பரிசோதனை செய்து பார்க்க சொல்கிறோம். இந்த காலகட்டத்தில் அந்த கருவின் டிரோபோபிளாஸ்ட் பார்மேஷன் (கருவை சுற்றியுள்ள வெளிப்புற அடுக்கு) சரியாக இருக்கும். அதுதான் பீட்டா எச்.சி.ஜி. வருவதற்கான அடிப்படையான செல்களாக அமையும். இந்த செல்களில் இருந்து வெளியேறும் ஹார்மோன்களை வைத்து தான் கர்ப்பம் உறுதியாக இருக்கிறதா என்பதை பரிசோதித்து தெரிந்து கொள்ள முடியும்.