சிறப்புக் கட்டுரைகள்

கர்ப்பப்பை தொற்றுக்களை தடுக்க பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்

Published On 2025-10-22 14:49 IST   |   Update On 2025-10-22 14:49:00 IST
  • உணவிலும் நல்ல பாக்டீரியாவான புரோபயாடிக் நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
  • குடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்போது தேவையில்லாத கிருமி தொற்றுக்கள் வராது.

நமது உடலின் ஆரோக்கியத்தில் புரோபயாடிக் எனப்படும் நல்ல பாக்டீரியாக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை நமது உடலில் நோய்களை ஏற்படுத்தக்கூடிய கெட்ட பாக்டீரியாக்களை கட்டுப்படுத்தி அழிக்கின்றன. இதன் மூலம் நம்முடைய ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உதவுகின்றன. இதேபோல் பெண்களின் கர்ப்பப்பைக்குள் நுழைய முயலும் தொற்றுக்களை தடுக்கும் முக்கியமான வேலைகளையும் இந்த நல்ல பாக்டீரியாக்கள் செய்கின்றன.

ஆனால் நாம் சாப்பிடும் ஆன்டிபயாடிக் மருந்து அந்த நல்ல பாக்டீரியாவை அழித்துவிடுகிறது. எனவே எந்த ஒரு ஆன்டிபயாடிக்கும் இந்த புரோபயாடிக் பாக்டீரியாவை அழித்து விடாமல் இருக்க, நாம் ஒரு புரோபயாடிக் மருந்து எடுத்துக் கொள்வது மிக மிக முக்கியம்.

மாதவிடாய் காலத்தில் நல்ல பாக்டீரியா பாதிக்கப்படலாம்:

பெண்களின் ஒவ்வொரு வாழ்க்கை தரத்திலும், குறிப்பாக மாதவிடாய் வருகிற காலகட்டத்தில் புரோபயாடிக் எனப்படும் நல்ல பாக்டீரியா பாதிக்கப்படும். எனவே அந்த காலகட்டத்தில் புரோபயாடிக் பாக்டீரியா அழிந்துவிடாமல் நாம் பாதுகாக்க வேண்டும். அதாவது பெண்களுக்கு மாதவிடாய் வருகிற காலகட்டத்தில் அவர்களின் பி.எச். அளவு மாறுபடும். அதனால்தான் இந்த புரோபயாட்டிக் எனப்படும் நல்ல பாக்டீரியா பாதிக்கப்படும்.

மாதவிடாய் வருகிற காலத்தில் வரும் ரத்தமானது காரத்தன்மை (ஆல்கலைன்) கொண்ட பி.எச். ஆகும். இது அந்த குழாய் வழியாக வரும்போது அதனுடைய இயற்கையான அமிலத்தன்மை கொண்ட பி.எச். தன்மையில் இருந்து மாறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. சில நேரங்களில் வெள்ளைப்படுதல் ஏற்படும்போது பாதிக்கப்படலாம். வெள்ளைப்படுதல் என்பது ஒரு ஆல்கலைன் சுரப்பாகும். அது கர்ப்பப்பையில் இருந்து வரும். அதுவும் இந்த புரோபயாடிக்கை பழுதாக்கும்.

பல நேரங்களில் கர்ப்ப காலம் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் காலகட்டத்திலும் இந்த யோனிப்பகுதியில் சீரான புரோபயாடிக் வருவதற்கு கொஞ்ச நாட்கள் ஆகும். இந்த வகையில் புரோபயாட்டிக் பழுதாவது, மாதவிலக்கு வரும்போது வரலாம். எனவே இந்த புரோபயாட்டிக் என்பது ரொம்ப முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. அதனால் தான் பல நேரங்களில் ஆன்டிபயாடிக் எடுக்கும் போது கூடவே லேக்டோபேசிலிஸ் (நல்ல பாக்டீரியா) மருந்து கொடுக்கிறோம். பல நேரங்களில் வயிற்றுப்போக்கு வந்தால் முதலில் கொடுப்பதே லாக்டோபேசிலிஸ் கொண்ட மருந்து தான். இவை உங்களுடைய நல்ல பாக்டீரியாவை மேம்படுத்தும் போது கிருமி தொற்றுக்கள் வராமல் தடுக்கவும் முடியும். ஆரோக்கியமாக வாழ வழி வகுக்கவும் முடியும்.

எளிதாக கிடைக்கும் நல்ல பாக்டீரியா நிறைந்த உணவு தயிர்:

சரி டாக்டர், இந்த புரோபயாடிக் நல்ல பாக்டீரியா என்பது எவ்வளவு காலமாக எல்லோருக்கும் தெரியும் என்று பலரும் கேட்பதுண்டு. கிட்டத்தட்ட 1945-ம் ஆண்டில் இருந்தே இந்த புரோபயாடிக் பாக்டீரியா பற்றி நிறைய விஷயங்கள் கண்டுபிடித்தார்கள்.

ஏனென்றால் பாக்டீரியாவை முதலில் மைக்ரோஸ்கோப்பில் பார்த்து கண்டுபிடித்த உடனேயே காற்று, தண்ணீரில் இருக்கிற எல்லா பாக்டீரியாக்களை பற்றியும் நிறைய ஆய்வுகள் கண்டுபிடித்தார்கள். அதிலும் தொடர்ச்சியாக ஆய்வுகள் நடத்தி பலவிதமான நல்ல பாக்டீரியா நமது உடலில் இருப்பதையும் உறுதி செய்தனர்.

அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த புரோபயாடிக் எனப்படும் நல்ல பாக்டீரியாவான லாக்டோபேசிலிசை கண்டுபிடித்தார்கள். புரோ என்றாலே நமது உடலுக்கு சாதகமானது என்று அர்த்தம். அதனால்தான் புரோபயாடிக் கண்டிப்பாக உணவுகளில் எடுத்துக்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் ஆன்டிபயாடிக் எடுக்கும்போது கூடுதலாக புரோபயாடிக் எடுத்துக்கொள்ள வேண்டும்.

நமக்கு மிகவும் எளிதாக கிடைக்கும் புரோபயாடிக் எனப்படும் நல்ல பாக்டீரியா நிறைந்த உணவு தயிர் ஆகும். தயிர் மற்றும் மோரில் நிறைய புரோபயாடிக் இருக்கிறது. புளிக்க வைத்த அல்லது நொதிக்க வைத்த அனைத்து உணவுப்பொருட்களிலும் புரோபயாடிக் இருக்கிறது. புளிக்க வைத்த பொருட்கள் என்றால் பாலை தயிராக மாற்றுகிறோம்.

இந்த தயிரில் இருப்பதுதான் சிறந்த புரோபயாடிக். அதனால் தான் ஒரு காலத்தில் தயிர் சாதமாக சாப்பிட்டுக் கொண்டிருந்த நிறைய பேர் நன்றாக ஆரோக்கியமாக இருந்தார்கள்.

வயிற்றுப்போக்கு, பேதி வந்தால் தயிர் கொடுங்கள், தயிர் சாதம் கொடுங்கள் என்று சொல்கிறோம். வைரஸ் பாதிப்பால் வயிறு பிரச்சினை ஏற்பட்டால் தயிர் சாப்பிடுங்கள் என்று சொல்கிறோம். இதில் இருக்கிற புரோபயாடிக் நமது குடல் சம்பந்தமான எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வை கொடுக்கிறது. எந்த ஒரு வியாதிக்கும் இந்த புரோபயாடிக் கண்டிப்பாக ஒரு பாதுகாப்பை கொடுக்கிறது. அந்த வகையில் நாம் புரோபயாடிக் நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டியது மிக மிக முக்கியமாகும்.

நல்ல பாக்டீரியா நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்:

நாம் அன்றாடம் சாப்பிடுகிற நொறுக்குத்தீனிகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் எல்லாவற்றிலும் ரசாயன பொருட்கள் மற்றும் கிருமிகள் இருக்கிறது. இதில் இருந்து நமது உடலை பாதுகாப்பது இந்த புரோபயாடிக் தான். இதனால் தான் நமது உணவுகளில் எப்போதுமே புரோபயாடிக் நிறைந்த தயிர் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதில் இருக்கின்ற புரோபயாடிக் குடலுக்கு பாதுகாப்பை கொடுக்கிறது.

பெண்களை பொருத்தவரைக்கும் கர்ப்பப்பையின் வெளிப்புறத்தில் உள்ள யோனிப்பகுதியில் பூஞ்சை தொற்றுக்கள், அரிப்பு, எரிச்சல், திரிதிரியாக வருதல், வெள்ளைப்படுதல் ஆகியவற்றால் வரும் தொற்றுக்கள் மற்றும் சிறுநீர்க்குழாய் பகுதிகளில் ஏற்படுகிற தொற்றுக்கள் ஆகியவற்றை தடுக்க இந்த புரோபயாடிக் பாக்டீரியா கண்டிப்பாக தேவை. அதனால்தான் அந்த நேரங்களில் ஆன்டிபயாடிக் கொடுக்கும்போது புரோபயாடிக்கை சேர்த்து கொடுக்கிறோம்.

மேலும் உணவிலும் நல்ல பாக்டீரியாவான புரோபயாடிக் நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். கர்ப்பகாலத்தில் கண்டிப்பாக புரோபயாடிக் உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். அதனால் தான் பெண்களுக்கு அந்த நேரத்தில் கூடவே புரோபயாடிக் மருந்துகளை கொடுக்கிறோம்.

நமக்கு பாதுகாப்பு கொடுக்கிற இந்த புரோபயாடிக்கை என்னென்ன உணவு பழக்க வழக்கங்கள் மூலம் மேம்படுத்தலாம் என்று பார்த்தால், ஒன்று மாத்திரைகளாக சாப்பிடலாம். இரண்டாவதாக இந்த புரோபயாடிக்கை யோனியில் வைக்கலாம், இதன் மூலமாக இந்த புரோபயாடிக் மேம்படும். மூன்றாவதாக உணவு பழக்க முறைகளால் அதிகரிக்கலாம்.

 

திரும்ப திரும்ப வரும் தொற்றுக்களுக்கு தயிர் மூலம் தீர்வு:

தயிர், மோர், புளித்த பாலாடைக்கட்டி (சீஸ்), ஆகியவற்றில் புரோபயாடிக் உள்ளது. ஆனால் அது பதப்படுத்தப்படாத பாலாடைக்கட்டியாக இருக்க வேண்டும். வீட்டில் தயாரிக்கும் பாலாடைக்கட்டி நல்ல ஒரு புரோபயாடிக்கை கொடுக்கிறது. சீனர்கள் சாப்பிடும் கிம்ச்சி என்ற உணவும் ஒருவகையான நொதித்த, புரோபயாடிக் நிறைந்த உணவுதான்.

நாம் தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளும் ஊறுகாய் கூட நொதித்தல் தன்மை கொண்ட உணவுதான். அதிலும் புரோபயாடிக் இருக்கிறது. அதனால் தான் நிறைய நேரங்களில் தயிர் சாதமும், ஊறுகாயும் சாப்பிடும்போது உடலுக்கு நல்லது என்று சொல்கிறோம். ஆனால் ஊறுகாயில் உப்பு அதிகம் இருக்கிறது. ஊறுகாயை உப்பு குறைவாக போட்டு நொதிக்க வைத்தால் அது ஒரு நல்ல உணவாக மாறும்.

இது தவிர முக்கியமாக நீங்கள் சாப்பிட வேண்டியது, புளித்த மாவில் செய்யும் இட்லி, தோசை போன்ற உணவாகும். புளித்த மாவில் நிறைய லாக்டோபேசிலிஸ் இருக்கிறது. கையில் திடீரென்று ஒரு புண் வந்தால், உதாரணத்துக்கு சூடுபட்டு காயம் உண்டானால், உடனடியாக நீங்கள் அதற்கு பாதுகாப்பு நடவடிக்கையாக புளித்த தோசை மாவில் கையை வைக்க வேண்டும். அந்த லாக்டோபேசிலிஸ் உடனடியாக பாதுகாப்பு கொடுக்கும். அதன் மூலம் காயம் விரைவில் குணமாகும். இந்த மாதிரியான சின்னச்சின்ன விஷயங்களிலும் நொதிக்கப்பட்ட உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இவை அனைத்தும் உங்களுடைய யோனிப்பகுதி, கர்ப்பப்பை ஆரோக்கியத்துக்கு போதுமான பாதுகாப்பை கொடுக்கிறது. எனவே நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு தயிர் கொடுங்கள், உணவுகளில் தயிரை அதிகமாக சேர்த்துக்கொள்ளுங்கள், ஒவ்வொருவரும் ஒரு ஆன்டிபயாடிக் எடுக்கும்போது உங்களுடைய டாக்டரிடம் புரோபயாடிக் கேட்டு வாங்கி சாப்பிடுங்கள்.

பல நேரங்களில் உங்களுக்கு ஒரு தொற்றானது திரும்ப திரும்ப வந்தால் அது சிறுநீர் தொற்றுக்களாக இருக்கலாம், யோனிப்பகுதி மற்றும் கர்ப்பப்பையை பாதிக்கக்கூடிய தொற்றுக்களாக இருக்கலாம், அல்லது பேதி, வயிற்றுப்போக்காக இருக்கலாம்.

இப்படிப்பட்டவர்கள் உணவுகளில் கண்டிப்பாக தயிர் சேர்த்துக் கொள்வது மிக மிக முக்கியமாகும். குடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்போது தேவையில்லாத கிருமி தொற்றுக்கள் வராது. தொற்றுக்களிடம் இருந்து பாதுகாப்பை ஏற்படுத்தும். நாம் ஆரோக்கியமாக வாழவும் வழி வகுக்கும்.

Tags:    

Similar News