2025 - ஒரு பார்வை

2025 REWIND: உலகை சுருட்டிய டிரம்ப் சூறாவளி.. அதிரடிகளும் அடாவடிகளும் - மீள்பார்வை

Published On 2025-12-07 12:00 IST   |   Update On 2025-12-07 13:00:00 IST
  • இது சரிபட்டு வராது என வெள்ளை மாளிகையில் தனது ஓவல் அலுவலக இருக்கையை விட்டு குதித்தெழுந்தார் டிரம்ப்.
  • தனக்கு பிடிக்காத இடதுசாரி மதுரோ ஆட்சியில் இருப்பதால், அவரை எதிர்க்கும் தன்னைப் போன்ற தீவிர வலதுசாரி மரியாவுக்கு அந்த பரிசு வழங்கப்பட்டது டிரம்புக்கு ஆறுதலாக அமைந்தது.

2017-21 வரையிலான காலகட்டத்தில் அமெரிக்க அதிபராக செயல்பட்ட டொனால்டு டிரம்ப் கடந்த ஆண்டு இறுதியில் நடந்த தேர்தலில் எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சியின் வேட்பாளரான இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரிஸை வீழ்த்தி மீண்டும் அதிபாராக தேர்வானார்.

பிரசார கூட்டதில் கொலை முயற்சி உள்ளிட்டவற்றில் இருந்து உயிர்தப்பி, உலக பணக்காரர் எலான் மஸ்க் ஏகோபித்த ஆதரவுடன் அமெரிக்கா அமெரிக்கார்களுக்கே என்று முழங்கிய குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப், தூங்கி வழிந்த ஜோ பைடன் நிர்வாகத்துக்கு மாற்றாக ஒரு உறுதியான தலைமையாக இருக்கும் என்று கருதிய அமெரிக்கர்கள் அவரை வெற்றி அடைய செய்தனர்.

அதன்படி இந்த ஆண்டு, 2025 தொடக்கத்தில் ஜனவரி 20 அன்று அமெரிக்காவின் 47வது அதிபராக டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார்.

அதன் பின் நிகழ்ந்தவை இன்னும் பல ஆண்டுகளுக்கு பேசப்படும் வரலாறாக மாறின. அது ஒரு தரப்புக்கு உறுதியான முடிவுகளாகவும், மற்றொரு தரப்பிற்கு கிறுக்குத் தனமான முடிவுகளாகவும் படலாம்.

ஆனால் உலகின் மிகப்பெரிய வல்லரசின் தலைவராக டிரம்ப் செய்த காரியங்கள் மொத்த உலகத்திற்கும் எதிரொலித்தன. வெள்ளை மாளிகையின் ஒவ்வொரு அறிவிப்பும் உலகை ஒரு புயல் போலச் சுழற்றியடித்தது.

அப்படி அவர் செய்த விஷயங்கள் என்ன என்பதை பார்ப்போம்.

முதலாவதாக வர்த்தகம். உலகிலேயே பணக்கார நாடான அமெரிக்கா மீது மற்ற நாடுகள் அதிக வரி விதிப்பதாக தொடர்ந்து புலம்பிய டிரம்ப் எடுத்த அதிரடி நடவடிக்கை தான் பதில் "வரிவிதிப்பு". அதுவரை உயிர் பயத்தை காட்டும் உலகப் போரை மட்டுமே கேள்விப்பட்டிருந்த பலருக்கு 'வர்த்தக போர்' எப்படி இருக்கும் என்பதை காட்டியவர் டிரம்ப்.

உலகளாவிய வர்த்தக முறையை தலைகீழாக மாற்றி, பங்குச்சந்தைகளை பல்லிளிக்க வைத்த டிரம்ப்பின் வரிவிதிப்புகள் பிரசித்தி பெற்றவை.

ஏப்ரல் 2 ஆம் தேதி டிரம்ப் எடுத்த அஸ்திரம் தான் வரிவிதிப்பு. ஏப்ரல் 2-ஐ அமெரிக்காவின் 'விடுதலை தினம்' என வர்ணித்த டிரம்ப் உலக நாடுகள் மீது உயர்த்தப்பட்ட இறக்குமதி வரிகளை நிர்ணயம் செய்து அறிவித்தார். பெரும்பாலான நாடுகளின் பொருட்களுக்கு 10% அடிப்படை வரி அமலுக்கு வந்தது.

இதுவே வர்த்தக போரின் தொடக்கமாக அமைந்தது. இந்தியா உள்ளிட்ட நாடுகள் செய்வதறியாது திகைத்தாலும் சீனா, கனடா உள்ளிட்ட நாடுகள் பதில் வரிகளை விதித்தன. இப்படி தொடர்ந்து மாறி மாறி வரி விதித்துக் கொண்டே பாதி வருடம் கழிந்தது. இதனால் உலக பங்குச்சந்தைகளும் பல முறை ஆட்டம் கண்டன. உலகளாவிய வர்த்தகத்தில் நிச்சயமின்மை ஏற்பட்டது.

நிலைமை இப்படி இருக்க இந்தியாவை குறிவைத்து டிரம்ப் அம்பு எய்ய தொடங்கினார். ஏற்கனவே இந்தியா அமெரிக்கா மீது அதிக வரி விதிப்பதாக புலம்பி வந்த டிரம்ப், ரஷியா மீதான மேற்கு நாடுகளின் தடைகளை பயன்படுத்தி உக்ரைன் போருக்கு நிதியளிக்கும் வகையில் இந்தியா ரஷியாவிடம் இருந்து அதிகளவில் குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதாக குற்றம்சாட்டி இந்தியாவுக்கு அபராதமாக இந்திய பொருட்களுக்கு 25 சதவீத இறக்குமதி வரியை விதித்தார் டிரம்ப்.

இது ஏற்கனவே இருந்த 25 வரியுடன் சேர்த்து இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரிச்சுமையாக மாறியது. ஒரு புறம் பிரதமர் மோடியை தனது நண்பர் என்று புகழ்ந்தபடி மறுபுறம் இந்த பாரபட்சமான வரிகளை டிரம்ப் இந்தியா மீது விதித்தது கவனிக்கத்தக்கது. இதனால் தமிழ்நாட்டிலும் பல இறக்குமதி சார்ந்த தொழில்கள் பாதிக்கப்பட்டன.

வரியை நிறுத்தி வைக்க எந்தவித கால நீட்டிப்பும் கிடையாது என்று அறிவித்த டிரம்ப், 90 நாட்கள் என்ற குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் புதிய வர்த்தக ஒப்பந்தங்களை எட்டும்படி சுமார் 200 நாடுகளை வலியுறுத்தியது அவரது வர்த்தக அடாவடி அணுகுமுறையை வெளிப்படுத்தியது.

அடுத்ததாக குடியேற்றம். ஜனவரியில் பதவியேற்ற முதல் நாளிலேயே அமெரிக்க மண்ணில் பிறந்த அனைவருக்கும் குடியுரிமை வழங்கும் விதியை தூக்கி எறிய "பிறப்பால் குடியுரிமை" பெறுவதற்கு கட்டுப்பாடு விதித்து நிர்வாக உத்தரவு பிறப்பித்தார். இது பின்னர் நீதிமன்றத்தில் சவால் செய்யப்பட்டு கீழ் நீதிமன்றங்கள் கடந்து உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த ஷாக் ட்ரீட்மென்ட்க்கு பிறகு அமெரிக்காவின் சட்டவிரோத குடியேறிகளை நாடுகடத்துவதாக ஆரம்பித்த டிரம்ப் அரசின் நடவடிக்கை மனிதாபிமற்ற முறையில் மாறியது. டிரம்ப் அரசின் குடிவரவு துறை அதிகாரிகள் பாரிய சோதனைகளை நிகழ்த்தி பல குடும்பங்களை ராணுவ விமானத்தில் கை கால்களை சங்கிலியால் பிணைத்து அவர்களின் சொந்த நாடுகளுக்கு நாடுகடத்தியது. இந்த ஆண்டு 3,258 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்பட்டதாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அண்மையில் மக்களவையில் தெரிவித்திருந்தார்.

அடுத்ததாக போர் நிறுத்தம். நீண்டகாலமாக நடைபெற்று வந்த உலகின் முக்கிய மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப் போவதாக கங்கணம் கட்டிய டிரம்ப் அதில் ஓரளவு வெற்றியும் பெற்றார். காசா போரை தவிர்த்து இதற்கும் அவர் பயன்படுத்திய அஸ்திரம் வர்த்தகம் தான்.

காசா மீது இஸ்ரேல் இரக்கமற்ற முறையில் நடத்திக்கொண்டிருந்த தாக்குதல்களில் இதுவரை 70,000 மக்கள் கொல்லப்பட்டனர். கடந்த மே முதல் ஆகஸ்ட் வரை டிரம்ப் முன்மொழிந்த போர் நிறுத்தம் அமலில் இருந்தது. ஆனால் அதன் பின் இஸ்ரேல் ரத்த வெறி அடங்காமல் மீண்டும் போரை தொடங்கியது.

காசா முற்றிலுமாக சிதைக்கபட்டது. மக்களுக்கு செல்ல வேண்டிய அத்தியாவசிய பொருட்களை தடுத்து நிறுத்தி மனிதனால் உருவாக்கப்பட்ட பெரும் பஞ்சத்தை இஸ்ரேல் உருவாக்கியது. பட்டினியால் நூற்றுக்கணக்கானோர் குறிப்பாக குழந்தைகள் எலும்பும் தோலுமாக மாண்டனர்.

சர்வதேச அழுத்தங்களுக்கு செவிமடுக்காத இஸ்ரேல், எஜமானர் ஸ்தானத்தில் உள்ள அமெரிக்காவுக்கு மட்டும் அஞ்சியது. அதே நேரம் இஸ்ரேலை செல்லப் பிள்ளையாக நடத்திய அமெரிக்கா ஆயுதங்கள் வழங்கி அரவணைத்தது. அதேநேரம் இது சரிபட்டு வராது என வெள்ளை மாளிகையில் தனது ஓவல் அலுவலக இருக்கையை விட்டு குதித்தெழுந்த டிரம்ப் தனது 20 அம்ச அமைதி திட்டத்தை முன்மொழிந்தார்.

அதன்படி அக்டோபர் 9 முதல் போர் நிறுத்தம் பெயரளவில் அமலுக்கு உள்ளது. ஒப்பந்தப்படி ஹமாஸ், எஞ்சிய இஸ்ரேல் பணய கைதிகளை ஒப்படைத்தது. ஆனால் போர் நிறுத்தத்தை மீறி அக்டோபர் 9 க்கு பிறகும் இஸ்ரேல் காசா மீது நடத்தி வரும் தாக்குதல்களில் 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இதற்கிடையே டிரம்ப் காசா மக்களை வேறு நாடுகளுக்கு அனுப்பி விட்டு அந்நகரை பணக்காரர்களுக்கான ரிசார்ட் நகரமாக மாற்றும் தனது தொலைநோக்கு திட்டத்தையும் முன்வைத்து விமர்சனத்துக்கு உள்ளார். காசாவை சர்வதேச படைகள் கட்டுப்பாட்டில் எடுப்பது என ஏறக்குறைய டிரம்ப் உடைய 20 அம்ச அமைதி திட்டமும் அதற்கான கூறுகளையே அதிகம் கொண்டுள்ளது.

இதற்கு மத்தியில் கடந்த ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக மே 7 இந்திய ராணுவம் பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை மேற்கொண்டது.இதைத்த்தொடர்ந்து இரு நாடுகளுக்கும் வெடித்த மோதல் 3 நாட்களில் அதாவது மே 9 ஆம் தேதி மாலை அமைதி ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது.

மோதலை தொடர்ந்தால் வர்த்தகம் செய்யமாட்டேன் என பிரதமர் மோடியையும், பாக் பிரதமர் ஷெரீபையும் மிரட்டி தானே இந்த போரை நிறுத்தியதாக டிரம்ப் இதுவரை 60 முறைக்கும் மேல் கூறிவிட்டார். அதேநேரம் இந்தியா பாகிஸ்தானுடன், தாய்லாந்து - கம்போடீயா, தாய்லாந்து ருவாண்டா உள்ளிட்ட 8 போர்களை 6 மாதத்தில் தான் நிறுத்தியதாக தம்பட்டம் தட்டிய டிரம்ப் தனது அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என அடம் பிடித்தார். ஆனால் அது வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியாவுக்கு கொடுக்கப்பட்டது.

வெனிசுலாவில் தனக்கு பிடிக்காத இடதுசாரி மதுரோ ஆட்சியில் இருப்பதால், அவரை எதிர்க்கும் தன்னைப் போன்ற தீவிர வலதுசாரி மரியாவுக்கு அந்த பரிசு வழங்கப்பட்டது டிரம்ப்புக்கு ஆறுதலாக அமைந்தது. அதேநேரம் அண்மையில் உலக கால்பந்து சம்மேளனம் டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கி அவரின் வட்டத்தை போக்கியது. சொல் பேச்சு கேட்டும் மற்ற நாடுகளின் போரை நிறுத்தியது போல் உக்ரைன் மீதான ரஷியா போரை நிறுத்த டிரம்ப் அவ்வளவு சுலபமாக நிறுத்த முடியவில்லை.  

ரஷிய அதிபர் புதினை, ரஷியாவை ஒட்டிய அமெரிக்க பிரதேசமாக அலாஸ்காவில் நேரில் சந்தித்து டிரம்ப் பேசிப் பார்த்தார். பேரம் படியவில்லை.தொடர்ந்து அமைதியை நிலைநாட்டியே தீருவேன் என டிரம்ப் உறுதியுடன் இருக்கிறார்.

ஆனால் கடந்த ஜூன் 22 ஆம் தேதி ஈரானுக்கு அமேரிக்காவில் இருந்து போர் விமானங்களை அனுப்பி தாக்குதல் நடத்தச் செய்த டிரம்ப், அந்நாட்டின் அணு ஆயுத கிடங்குகளை அழித்ததாக அறிவித்தார். ஆனால் ஈரான் இதை மறுத்து வருகிறது. அந்த சமயத்தில் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே

இதுதவிர பிந்தங்கிய நாடுகளுக்கு வல்லரசு என்ற முறையில் UNAID திட்டம் மூலம் அமெரிக்கா அளித்து வந்த நிதியுதவிகளை மானாவாரியாக நிறுத்திய டிரம்ப், அமெரிக்கர்களையும் விட்டுவைக்கவில்லை. சிக்கனம் பிடிக்கிறேன் பேர்வலி என்ற பெயரில் அரசுத்துறைகளில் ஆயிரக்கணக்கில் பணி நீக்கங்கங்களை மேற்கொண்டார்.

இருப்பினும் காண்டில் இருந்த அமெரிக்கர்களை பிக் பியுட்டிபுல் பில் என்ற வரிக்குறைப்பு மசோதா மூலம் சற்று தாஜா செய்தார் டிரம்ப். இருப்பினும் ஜனநாயக விழுமியங்களை நசுக்கும் விதமாக தனது பேச்சை கேட்காத பல்கலைக்கழகங்களுக்கு நிதியை நிறுத்தியது, ஊடகங்கள் மீதான கட்டுப்பாடு என ஒரு சர்வாதிகார தலைவருக்கு ஏற்ற சர்வ லட்சணங்களோடு டிரம்ப் செயல்பட்டு வருகிறார்.

இதற்கிடையே வெவ்வேறு துறைகளுக்கு நிதி வழங்குவதில் எதிர்கட்சியுடன் ஏற்பட்ட முரண்பட்டால் அமெரிக்காவில் பொதுமுடக்கம் ஏற்பட்டது. இதனால் பல அரசு துறைகள் ஊதியமின்மை, ஊழியர்கள் பற்றாக்குறை ஆகியவற்றால் செயல்பட முடியாமல் ஸ்தம்பித்தது.

இந்த முடக்கம் 43 நாட்கள் தொடர்ந்து கடந்த நவம்பரில் எதிர்கட்சிகளுடன் தற்காலிக உடன்பாடு ஏற்பட்டு முடிவுக்கு வந்தது. இதற்கிடையே தற்போது போதைப்பொருட்களை தடுக்கிறேன் என கூறி களமிறங்கி உள்ள டிரம்ப் தனது பரம எதிரி வெனிசுலா அதிபர் மதுரோ மீது தனது முழு கவனத்தையும் திரும்பியுள்ளார். வெனிசுலா அமைந்துள்ள கரீபியன் கடற்பரப்பில் அமெரிக்க படைகளை நிலைநிறுத்துவது, மதுரோ தலைக்கு விலை வைப்பது என படு பிஸியாக டிரம்ப் இயங்கி வருகிறார்.

வயதானதால் டிரம்ப் என்ன செய்கிறார், என்ன பேசுகிறார் என அவருக்கே தெரியவில்லை என்று சிலர் கருதினாலும், அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே என்ற அவரின் கொள்கையில் அவர் உறுதியாக இருப்பது கண்கூடு.

வெளிநாட்டு பணியாளர்களுக்கான H1B விசா கட்டுப்பாடுகள், வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கட்டுப்பாடுகள், மூன்றாம் உலக நாட்டவர் அமெரிக்காவுக்குள் நுழைய தடை உள்ளிட்ட அவரது முடிவுகள் இதற்கு வலு சேர்கின்றன.

மொத்தத்தில் தனது முதல் பதவிக்காலத்தை விட மிக தீவிரமாக செயல்பட்டு வரும் டிரம்ப் ஒவ்வொரு நாளும் உலகை ஆச்சர்யத்திலோ அல்லது அதிர்ச்சியிலோ ஆழ்த்தி வருவது தொடர்கிறது. இனியும் தொடரும்.                                                                     

Tags:    

Similar News