2025 REWIND: தமிழ்நாட்டு பட்ஜெட்டில் மாற்றப்பட்ட ரூபாயின் குறியீட்டு சின்னமும்... சர்ச்சைகளும்...
- டாலர், யூரோ, யென், பவுண்ட் போன்றவற்றுக்கு தனி அடையாளச் சின்னம் உள்ளது.
- ரூபாய்க்கான புதிய குறியீடு 2010-ம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி அன்று இந்திய அரசால் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
தமிழ்நாடு அரசின் 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மார்ச் மாதம் 14-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு முன்னதாக நிதிநிலை அறிக்கை குறித்த முன்னோட்ட காணொலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மார்ச் 13-ந்தேதி அன்று வெளியிட்டார். அதில் இருந்த ஒரு படம், நாடு முழுவதும் பேசு பொருளாக மாறியது.
முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், 'எல்லார்க்கும் எல்லாம்' என்ற தலைப்பில் நிதிநிலை அறிக்கை முன்னோட்ட காணொலியை வெளியிட்டார். இந்த காணொலியில் நிதிநிலை அறிக்கை குறித்த இலச்சினையில் ரூபாயை குறிக்கும் குறியீடாக 'ரூ'-வை தமிழ்நாடு அரசு பயன்படுத்தி இருந்தது.
மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை, கல்விக்கு நிதி வழங்காதது உள்ளிட்ட சர்ச்சைகள் எழுந்து நிலையில் தமிழ்நாடு பட்ஜெட் லோகோவில் தேவநாகிரி எழுத்தான '₹' குறியீட்டுக்கு பதிலாக 'ரூ' என மாற்றி தமிழ்நாடு அரசு வெளியிட்டது.
சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே இந்தியாவில் ரூபாய் அதிகாரப்பூர்வமான பணமாக அறிவிக்கப்பட்டது. இந்திய ரூபாய்க்கென தனி குறியீடு கடந்த 2010-ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ளது. இந்த புதிய குறியீட்டை வடிவமைத்தவர், தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும், ஐஐடி தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் பணியாற்றுபவருமான டி. உதயகுமார். டாலர், யூரோ, யென், பவுண்ட் போன்றவற்றுக்கு தனி அடையாளச் சின்னம் உள்ளது. அந்த வரிசையில் இந்திய ரூபாயும் சேர்ந்தது. இந்திய ரூபாய்க்கான தனி சின்னத்தை தமிழகத்தைச் சேர்ந்த உதயகுமார் வடிவமைத்த நிலையில் மத்திய அரசு அதற்கு ஒப்புதல் அளித்து அரசுப் பயன்பாட்டில் சேர்த்தது. ரூபாய்க்கான புதிய குறியீடு 2010-ம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி அன்று இந்திய அரசால் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், கடந்த ஆண்டுகூட தமிழ்நாடு அரசின் பட்ஜெட் இலச்சினையில் ரூபாய் குறியீடு இடம்பெற்றிருந்த நிலையில், இந்தாண்டு பட்ஜெட் இலச்சினை 'ரூ' என மாற்றப்பட்டிருப்பது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது.
மும்மொழிக் கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், ரூபாய் குறியீடு பட்ஜெட் இலச்சினையில் மாற்றப்பட்டதற்கு பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், தேசிய ரூபாய் குறியீட்டை ஒரு மாநிலம் நிராகரிப்பது இதுவே முதல்முறை என்றும், மத்திய அரசின் மீதான எதிர்ப்பின் காரணமாக தமிழ்நாடு அரசு இந்த முடிவை எடுத்திருப்பதாக பேசப்பட்டது.
தமிழ்நாடு பட்ஜெட் 2025-26 ஆவணங்களில் இருந்து அதிகாரபூர்வ ரூபாய் சின்னமான '₹'-ஐ தமிழ்நாடு அரசு நீக்கியுள்ளது பிரிவினைவாத உணர்வைப் பரப்பும் ஆபத்தான மனநிலை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்தார்.
இதுகுறித்து அப்போதைய பா.ஜ.க. மாநில தலைவரான அண்ணாமலை, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் கடுமையாக விமர்சித்து இருந்தனர்.