2025 - ஒரு பார்வை

2025 REWIND: தந்தையா? தனயனா? பா.ம.க.வில் முற்றும் மோதல் - மாம்பழம் யாருக்கு?

Published On 2025-12-17 08:29 IST   |   Update On 2025-12-17 08:29:00 IST
  • முதலில் பரபரப்பை ஏற்படுத்தினாலும் நாளடைவில் சரியாகிவிடும் என்றுதான் நினைத்தார்கள் பலரும்.
  • ராமதாஸை சிலர் ஆட்டிவைப்பதாகவும் துரோகிகள் சிலர் உடன் இருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

தமிழக அரசியலில் தந்தை, மகன் இணைந்து பணியாற்றுகிறார்கள். அது கட்சிகள் என்று தெரியுமா? என்று கேட்டால், அனைவரும் சொல்வது தி.மு.க., பா.ம.க. என்று... தந்தையின் சொல்படி கேட்டு கட்சியில் பணியாற்றி வருகிறார்கள் என்று கூறப்பட்டது. அதன்படி, மு.க.ஸ்டாலின், தி.மு.க.வில் இணைந்து தொண்டர், செயலாளர், இளைரஞரணி தலைவர், மேயர், துணை முதலமைச்சர் என பணியாற்றி தற்போது முதலமைச்சராக உள்ளார்.

அன்புமணி ராமதாஸ், பா.ம.க.வில் இணைந்தவுடன் மத்திய அமைச்சராக பொறுப்பேற்று பின்னர் கட்சியின் தலைவராக பணியாற்றி வருகிறார்.

இப்படி இருக்கும் நிலையில், தி.மு.க.வில் தந்தைக்கு பிறகு கட்சியை சிறப்பாக நடத்தி வருகிறார் மு.க.ஸ்டாலின். ஆனால் பா.ம.க.விலோ கடந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற பொதுக்குழுவில் தந்தை- மகனுக்கும் ஏற்பட்ட கருத்து மோதல் முதலில் பரபரப்பை ஏற்படுத்தினாலும் நாளடைவில் சரியாகிவிடும் என்றுதான் நினைத்தார்கள் பலரும். ஆனால், அந்த மோதலோ ஓராண்டாக நீடித்து வருகிறது.

 

ராமதாஸின் மகள் வழி பேரனான முகுந்தனை பா.ம.க. இளைஞரணி செயலாளராக நியமிப்பதில் தொடங்கிய அதிகாரப் போட்டி தற்போது கட்சி யாருக்கு சொந்தமானது? என்று வரை சென்றுள்ளது.

மேலும் அன்புமணி ஆதரவாளர்களை ராமதாஸ் நீக்குவதும், ராமதாஸ் ஆதரவாளர்களை அன்புமணி நீக்குவதும் என போட்டாபோட்டியாக தொடங்கி தைலாபுரம், பனையூர் என மாற்றி மாற்றி அறிக்கைகள் வந்தன. இதனிடையே, இருதரப்பினரும் போட்டிபோட்டு பொதுக்குழுவை கூட்டினார்கள்.

கட்சி நிர்வாகிகள் நியமனம், வேட்பாளர் தேர்வு, கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் போன்ற முக்கிய முடிவுகளில் இருவரின் அதிகாரப் போட்டியே இந்த மோதலின் அடிப்படை என்று கூறப்பட்டது. ஆனால் அன்புமணியோ, ராமதாஸை சிலர் ஆட்டிவைப்பதாகவும் துரோகிகள் சிலர் உடன் இருப்பதாகவும் குற்றம்சாட்டினார். வேவு பார்க்க டெலிபோனில் ஓட்டுகேட்பு கருவி வைக்கப்பட்டது என்றும் அது அன்புமணியின் வேலை தான் என்று ராமதாஸ் குற்றம்சாட்டினார்.

 

தந்தை, மகனுக்கான மோதலால் கட்சி நிர்வாகிகள் மட்டுமில்லாமல் அதிமுக போன்ற கூட்டணிக் கட்சிகள் பாமகவுடன் கூட்டணி அமைப்பதில் குழப்பத்தில் உள்ளன. யாரை அணுகுவது எனத் தெரியாமல் தவிக்கின்றன.

இந்த மோதல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலுக்கு முன்பாக தீர்க்கப்படாவிட்டால், கட்சியின் எதிர்காலமே கேள்விக்குறியாகும் என அரசியல் நிபுணர்கள் கருதுகின்றன. 

Tags:    

Similar News