விஜய்யின் புதுச்சேரி வருகை ஒத்திவைப்பு- த.வெ.க. தொண்டர்கள் ஏமாற்றம்
- புதுச்சேரி காவல்துறை நேரடியாக மறுப்பு தெரிவிக்காமல் இருந்தது.
- கூட்டத்தில் காவல்துறை சார்பில் விஜய் புதுச்சேரியில் ரோடு ஷோ நடத்த பல்வேறு காரணங்களை விளக்கி திட்டவட்டமாக மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் த.வெ.க. தலைவர் விஜய் 5-ந்தேதி ரோடு ஷோ நடத்த முடிவு செய்து காவல்துறையில் அனுமதி கேட்கப்பட்டது.
கரூர் துயர சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தில் ரோடு ஷோ நடத்த அனுமதி வழங்கப்படவில்லை. மேலும், ரோடு ஷோவுக்கு விதிமுறைகள் வழங்குவது தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
புதுச்சேரி மாநிலம் சென்னை ஐகோர்ட்டுக்கு உட்பட்டு செயல்படுகிறது. இதனால் ஐகோர்ட்டு உத்தரவுகள் அனைத்தும் புதுச்சேரி மாநிலத்துக்கும் பொருந்தும். இதனால் புதுச்சேரி காவல் துறை ரோடு ஷோவுக்கு அனுமதி வழங்காமல் இழுத்தடித்து வந்தது.
ஆனால் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் உள்ள தனது செல்வாக்கை பயன்படுத்தி, ரோடு ஷோ நடத்த அனுமதி பெற பல்வேறு முயற்சிகளை எடுத்தார். இதற்காக பல முறை தொடர்ந்து முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து பேசினார். இருப்பினும் புதுச்சேரி காவல்துறை நேரடியாக மறுப்பு தெரிவிக்காமல் இருந்தது.
இந்த நிலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் நேற்றைய தினம் சட்டசபை வளாகத்தில் ரோடு ஷோ தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
அமைச்சர் லட்சுமி நாராயணன், ஐ.ஜி. அஜித்குமார் சிங்ளா, டி.ஐ.ஜி. சத்தியசுந்தரம், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு கலைவாணன், கே.எஸ்.பி. ரமேஷ் எம்.எல்.ஏ., த.வெ.க. பொதுச்செயலாளர்கள் புஸ்சி ஆனந்து, ஆதவ் அர்ஜூனா, முன்னாள் எம்.எல்.ஏ. சாமிநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் காவல்துறை சார்பில் விஜய் புதுச்சேரியில் ரோடு ஷோ நடத்த பல்வேறு காரணங்களை விளக்கி திட்டவட்டமாக மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் நிபந்தனைகளுடன் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து கட்சித் தலைவர் விஜய்யிடம் பேசி தகவல் தெரிவிப்பதாக த.வெ.க.வினர் கூறிச் சென்றனர். இதனிடையே டிட்வா புயல் காரணமாக புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இன்னும் சில நாட்கள் தொடர் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதனால் புதுச்சேரிக்கு 5-ந்தேதி விஜய் வருகை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் வருகையை எதிர்பார்த்திருந்த புதுச்சேரி த.வெ.க. தொண்டர்கள் பெருத்த ஏமாற்றமடைந்துள்ளனர்.