விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி - பாஸ் இல்லாதவர்களுக்கும் அனுமதி அளிப்பு
- பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு இருந்தனர்.
- தொண்டர்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் சென்ற நிலையில் பாஸ் இல்லாதவர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை உப்பளம் துறைமுக வளாகத்தில் த.வெ.க. பொதுக்கூட்டத்துக்காக காலை முதல் தொண்டர்கள் குவிந்திருந்தனர்.
கியூ.ஆர். கோடு பாஸ் இல்லாதவர்களும் பொதுக்கூட்ட இடத்தை நோக்கி ஊர்வலமாக வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியும் கலைந்து செல்லாமல் விஜய்யை பார்ப்பதற்காக நின்றிருந்தனர்.
இதனால் அங்கு கடும் நெரிசல் ஏற்பட்டது. போலீசாரை நெட்டித்தள்ளி அவர்கள் கூட்ட வளாகத்துக்குள் நுழைய முயன்றனர். இதனையடுத்து போலீசார் தடியை சுழற்றி தரையில் அடித்தும், சிலரை லேசாக அடித்தும் கலைந்து போக செய்தனர்.
இதையறிந்த பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், யாரும் காவல் துறையினருக்கு சிரமம் தர வேண்டாம். பாஸ் உள்ளவர்கள் முதலில் வாருங்கள். அதன்பின் வரிசையாக தொண்டர்கள் வந்தால் பொதுக்கூட்டத்துக்கு அனுமதிப்போம். காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தலைவர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் யாரும் செயல்பட வேண்டாம் என தொடர்ந்து மைக்கில் பேசி தொண்டர்களை சமாதானப்படுத்தினார்.
இந்நிலையில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு இருந்தனர்.
விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வந்த தொண்டர்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் சென்ற நிலையில் பாஸ் இல்லாதவர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது.
போலீசாருடன் மல்லுக்கட்டி கொண்டு இருந்த த.வெ.க. தொண்டர்கள் போலீசார் பேரிகார்டை நீக்கியதும் முண்டியடித்து கொண்டு உள்ளே சென்றனர்.