விஜய்யை பாராட்டிய முதல்-அமைச்சர் ரங்கசாமி: புதுச்சேரி சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைக்க அச்சாரம்?
- விஜய் கட்சி தொடங்கிய போதும், மாநாடு நடத்திய போதும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
- இப்போதும் அவர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒட்டலில் ரகசியமாக சந்தித்து பேசுவதாக கூறப்படுகிறது.
புதுச்சேரி:
புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி நேற்று தனது 75-வது பிறந்த நாளை கொண்டாடினார்.
அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி மற்றும் கவர்னர் கைலாஷ்நாதன், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரிகள் என பலரும் போன், எக்ஸ் வலைதளம் மூலம் வாழ்த்து தெரிவித்தனர்.
அதுபோல் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.
அதற்கு நன்றி தெரிவித்த முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறியதாவது:-
வணக்கம்பா- நன்றி...வாழ்த்துகள்- நல்லாயிருக்கணும்- வளமாக இருக்கணும். நல்லா வரணும். நல்லா பண்ணுங்க வெற்றி பெறணும், நல்லா செய்துட்டு வாங்க என விஜய்க்கு பதில் வாழ்த்துகள் தெரிவித்தார்.
புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கும் த.வெ.க. தலைவர் விஜய்க்கும் இடையே நட்பு உள்ளது. 2021 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று முதல்- அமைச்சராக ரங்கசாமி பதவி ஏற்ற பிறகு பனையூரில் உள்ள விஜய் வீட்டில் அவரை நேரடியாக சந்தித்தார்.
அதன் பிறகு விஜய் கட்சி தொடங்கிய போதும், மாநாடு நடத்திய போதும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
இப்போதும் அவர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒட்டலில் ரகசியமாக சந்தித்து பேசுவதாக கூறப்படுகிறது.
இதனால் புதுச்சேரி சட்டசபை தேர்தலில் த.வெ.க.வுடன் முதல்- அமைச்சர் ரங்கசாமி கூட்டணி அமைத்து போட்டியிடலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.