இப்படியும் கூட இறப்பு வருமா.. ஓடும் ரெயிலில் இருந்து பயணி வீசிய தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி
- காயம் மிகவும் மோசமாக இருந்ததால் பாதல் நிலைகுலைந்து கீழே விழுந்தான்.
- ஒரு கனமான பொருள் மார்பில் அதிக அழுத்தத்துடன் மோதுவதால் இதயதிற்கு சேதம் ஏற்படும்.
குஜராத்தில் ஓடும் ரெயிலில் இருந்து பயணி ஒருவர் வீசிய தண்ணீர் பாட்டிலால் 14 வயது சிறுவன் மார்பில் காயமடைந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த திங்கட்கிழமை பிற்பகல் 2:45 மணியளவில் வேராவல்-பாந்த்ரா ரெயில் ராஜ்கோட் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது.
ராஜ்கோட்டில் வசிக்கும் மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த பாதல் என்ற அந்த 14 வயது சிறுவன் அன்றைய தினம், ரெயில் தண்டவாளம் அமைந்துள்ள பகுதி அருகே நண்பர்களுடன் அமர்ந்திருந்தான். அப்போது அவ்வழியாக வந்த ரெயிலில் இருந்த அடையாளம் தெரியாத பயணி ஒருவர் தண்ணீர் பாட்டிலை வெளியே எறிந்தார். அது பாதலின் மார்பில் நேரடியாகத் தாக்கியது. காயம் மிகவும் மோசமாக இருந்ததால் பாதல் நிலைகுலைந்து கீழே விழுந்தான்.
உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் மருத்துவர்கள் சிறுவன் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
ஆரம்பத்தில் மாரடைப்புதான் மரணத்திற்குக் காரணம் என்று போலீசார் சந்தேகித்தனர். ஆனால் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பிறகு, ரெயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில்தான் மரணத்திற்குக் காரணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஒரு கனமான பொருள் மார்பில் அதிக அழுத்தத்துடன் மோதுவதால் இதயத்திற்கு கடுமையான சேதம் ஏற்பட்டு, உடனடி மரணத்திற்கு வழிவகுக்கும்.
அலட்சியமாக செயல்பட்ட ரெயில் பயணி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.