வட மாநிலங்களில் பயிலும் காஷ்மீர் மாணவர்கள் மீது வன்முறை.. தொடர் அச்சுறுத்தல் - JKSA
- இந்து ரக்ஷா தளம், காஷ்மீர் முஸ்லிம்கள் வியாழக்கிழமை காலை 10 மணிக்குள் மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டும் அல்லது அவர்கள் கொல்லப்படுவார்கள் என்று எச்சரித்தது.
- மாநில அரசுகளையும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியையும் கேட்டுக்கொண்டார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதல் சம்பவத்துக்கு தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான டி.ஆர்.எப். பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலுக்கு பின் பாகிஸ்தான் மீதான கடும் நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் வட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள கல்வி நிறுவனங்களில் தங்கி, படித்து வரும் காஷ்மீர் மாணவர்கள் அச்சுறுத்தல்களையும் வன்முறையையும் எதிர்கொண்டதாகக் கூறுகின்றனர். இதுவரை எட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக ஜம்மு காஷ்மீர் மாணவர் சங்கம் (JKSA) தெரிவித்துள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ராவில் உள்ள ஆர்னி பல்கலைக்கழகத்தில், விடுதிக் கதவுகளை உடைத்து, காஷ்மீர் மாணவர்களை 'பயங்கரவாதிகள்' என்று அழைத்ததாக JKSA தெரிவித்துள்ளது.
உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில், இந்து ரக்ஷா தளம் வீடியோ ஒன்று காஷ்மீர் முஸ்லிம்கள் வியாழக்கிழமை காலை 10 மணிக்குள் மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டும் அல்லது அவர்கள் கொல்லப்படுவார்கள் என்று எச்சரித்தது. பல மாணவர்கள் பயத்தில் தங்கள் அறைகளை விட்டு வெளியேறினர்.
பஞ்சாபின் டெராபசியில், நள்ளிரவுக்குப் பிறகு ஒரு விடுதிக்குள் தாக்குதல் நடத்தியவர்கள், மாணவர்களின் ஆடைகளைக் கிழித்து, கூர்மையான ஆயுதத்தால் ஒருவரைக் காயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில், சில வீட்டு உரிமையாளர்கள் காஷ்மீர் குத்தகைதாரர்களை வெளியேறச் சொல்லியுள்ளனர்.
JKSA ஒருங்கிணைப்பாளர் நசீர் குவேஹாமி இந்த சம்பவங்களை ' குறிவைத்து நடத்தப்படும் வெறுப்பு பிரசாரங்கள்' என்று கூறி, மாநில அரசுகளையும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியையும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
காஷ்மீர் மாணவர்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கவும், அரசியல் விவாதங்களைத் தவிர்க்கவும், சமூக ஊடக நடவடிக்கைகளை குறைத்துக்கொள்ளவும் JKSA சங்கம் அறிவுறுத்தியது. உதவி தேவைப்படுபவர்களுக்கு ஹெல்ப்லைன் எண்கள் பகிரப்பட்டுள்ளன. வன்முறையை ஊக்குவிக்கும் சமூக ஊடகப் பதிவுகளை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.