இந்தியா

எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்கிறேன்: சபாநாயகருக்கு கடிதம் அனுப்பிய விஜயதாரணி

Published On 2024-02-25 02:12 GMT   |   Update On 2024-02-25 02:12 GMT
  • காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி நேற்று பா.ஜ.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார்.
  • எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்கிறேன் என விஜயதாரணி சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

புதுடெல்லி:

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் முக்கிய தலைவர்கள் தங்களது சொந்த கட்சியை விட்டு எதிரணிக்கு தாவி வருகின்றனர்.

இதற்கிடையே, தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ. விஜயதாரணி நேற்று திடீரென டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்துக்குச் சென்று தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார். அப்போது, காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் முதல் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக கட்சித்தலைமைக்கு எழுதிய கடிதத்தை செய்தியாளர்களிடம் காண்பித்தார்.

இதையடுத்து, கட்சித் தாவல் தடைச்சட்டத்தின்படி, ஒரு அரசியல் கட்சியின் எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. தாங்கள் சார்ந்திருக்கும் கட்சியில் இருந்து வேறு அரசியல் கட்சிக்கு தாவினால் அவர்களின் பதவி பறிக்கப்பட்டு விடும் என்ற விதியின் அடிப்படையில் விஜயதாரணியின் எம்.எல்.ஏ. பதவியை உடனடியாக தகுதிநீக்கம் செய்து அறிவிக்குமாறு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய விஜயதாரணி, எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்கிறேன் என சபாநாயகர் அப்பாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

குமரி மாவட்டம் விளவங்கோடு சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் தொடர்ந்து 3 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்து எடுக்கப்பட்ட விஜயதாரணி, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் கொள்ளுப்பேத்தி ஆவார். இவர் தமிழக காங்கிரஸ் கட்சியின் சட்டசபை கொறடாவாகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News