இந்தியா

எய்ம்ஸ் அவசர சிகிச்சை பிரிவுக்குள் சென்ற போலீஸ் வாகனம்- வீடியோ வைரல்

Published On 2024-05-23 06:52 GMT   |   Update On 2024-05-23 06:59 GMT
  • பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதற்கு உத்தரகாண்ட் மாநில மகளிர் ஆணையம் கண்டம் தெரிவித்துள்ளது.
  • சம்பவத்தில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆணையத்தின் தலைவர் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

டேராடூன்:

ரிஷிகேஷில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) பெண் டாக்டரை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நர்சிங் அதிகாரியை கைது செய்ய போலீஸ் வாகனம் அம்மருத்துவமனையின் 6-வது மாடியில் உள்ள வார்டுக்கு வந்தது. இதனால் நோயாளிகள் அதிர்ச்சியடைந்தனர். போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் வாகனம் செல்ல வழி செய்தனர். இச்சம்பவம் செவ்வாய்கிழமை நடந்த நிலையில் இதுதொடர்பான வீடியோ நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் ஆக்கிரமித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பான முழு விவரம் வருமாறு:-

எய்ம்ஸ் ஆபரேஷன் தியேட்டரில் பணிபுரியும் நர்சிங் அதிகாரி சதீஷ் குமார் மீது எய்ம்ஸ் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் செய்தார். இதுதொடர்பாக வழக்கு மட்டுமே போலீசார் பதிவு செய்ததாக கூறப்படுகிறது. மேற்கொண்டு நடவடிக்கை எடுக்காததால் கோபமடைந்த மருத்துவர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சதீஷ் குமாரை கைது செய்ய முடிவு செய்த போலீசார், அவர் பணிபுரியும் மருத்துவமனையின் 6-வது மாடியில் உள்ள வார்டுக்கு போலீசார் வாகனத்துடன் நுழைந்தனர். இருபுறமும் படுக்கைகளில் நோயாளிகள் வரிசையாக படுத்து இருந்தனர். அவசர சிகிச்சை பிரிவில் நுழைந்த போலீஸ் வாகனத்தை கண்ட நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் என்ன நடக்கிறது என்பது புரியாமல் திகைத்தனர். இதையடுத்து போலீஸ் வாகனம் செல்ல வழி சீர்செய்யப்பட்டது. 6-வது மாடிக்கு சென்ற போலீசார் சதீஷ் குமாரை கைது செய்து வாகனத்தில் ஏற்றினர்.

இச்சம்பவங்கள் தொடர்பாக 26 வினாடிகள் கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

மேலும் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதற்கு உத்தரகாண்ட் மாநில மகளிர் ஆணையம் கண்டம் தெரிவித்துள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆணையத்தின் தலைவர் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதியுள்ளார்.


Tags:    

Similar News