இந்தியா

கர்ப்பிணி மனைவியை தவிக்கவிட்டு ஓடிய கணவன்... ரீல்ஸ் வீடியோவால் சிக்கிய வினோதம்

Published On 2025-09-03 07:51 IST   |   Update On 2025-09-03 07:51:00 IST
  • சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் புதிதாக கணக்கு தொடங்கிய ஷீலு, அதில் வரும் ரீல்ஸ்களை பார்த்து ரசித்து வந்தார்.
  • பப்லு காணாமல் போனதற்கு ஷீலுதான் காரணம் என்று கணவர் குடும்பத்தினர் அவரை குற்றம் சாட்டினர்.

பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்று ஒரு பழமொழி உண்டு. அது இப்படித்தான் என்பதை நிரூபிக்கும் வகையில் நடந்த இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

உத்தரபிரதேச மாநிலம் சண்டிலா அருகே உள்ள முரார்நகரை சேர்ந்தவர் ஷீலு. இவருக்கும் அடமாவ் கிராமத்தை சேர்ந்த சாண்டீரா என்கிற பப்லு என்பவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

புதுமண தம்பதிகள் இருவரும் அடமாவ் கிராமத்தில் 2 மாதங்கள் வசித்து வந்தனர். ஷீலு கர்ப்பிணியானார்.

இந்தநிலையில் வீட்டை விட்டு சென்ற பப்லு, அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவருடைய தந்தை புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பப்லுவை தீவிரமாக தேடினர். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

பப்லு காணாமல் போனதற்கு ஷீலுதான் காரணம் என்று கணவர் குடும்பத்தினர் அவரை குற்றம் சாட்டினர்.

8 ஆண்டுகளாக பப்லு பற்றிய எந்த தகவலும் தெரியாமல், ஷீலு தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார். அவருக்கு குழந்தையும் பிறந்தது.

சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் புதிதாக கணக்கு தொடங்கிய ஷீலு, அதில் வரும் ரீல்ஸ்களை பார்த்து ரசித்து வந்தார். அதில் ஒரு வீடியோவில் மாயமான தனது கணவர் பப்லு இருப்பதை பார்த்தார். பல முறை அந்த வீடியோவை பார்த்து அதில் இருப்பது தனது கணவர்தான் என்பதை உறுதிப்படுத்திய ஷீலு, அதுபற்றி போலீசில் புகார் செய்தார்.

போலீசார் பல்வேறு பகுதிகளில் தேடியபோது பப்லு, பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

போலீசார் லூதியானா சென்று பப்லுவை தேடிப்பிடித்தனர். அப்போது அவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து 8 ஆண்டுகள் அவருடன் குடும்பம் நடத்தி வந்ததும் அம்பலமாகியது.

இதையடுத்து அவரை சொந்த கிராமத்துக்கு போலீசார் அழைத்து வந்தனர். கர்ப்பிணி மனைவியை தவிக்கவிட்டு எதற்காக அவர் வீட்டை விட்டு ஓடினார் என்பது குறித்து அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருவதாக போலீசார் கூறினர்.

பப்லு ஓடிப்போனதற்கு 8 ஆண்டுகளாக பழியை சுமந்து வந்த ஷீலு, மீண்டும் தனது கணவரை ஏற்பாரா என்பதும் பின்னர்தான் தெரியவரும்.

Tags:    

Similar News