இந்தியா

NIA அதிரடி சோதனை - பாப்புலர் பிரண்ட் ஆதரவாளர்கள் வீடுகளில் இருந்து முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

Published On 2026-01-29 10:39 IST   |   Update On 2026-01-29 10:39:00 IST
  • மாநிலம் முழுவதும் 9 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
  • எஸ்.டி.பி.ஐ. தலைவர் ஒருவரது வீட்டில் நடைபெற்ற சோதனையில், டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் வங்கி பதிவுகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

திருவனந்தபுரம்:

இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் தீவிரவாத செயல்களில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு ஈடுபட்டதாக புகார் கூறப்பட்டது இதனை தொடர்ந்து கடந்த 2022-ம் ஆண்டு, இந்திய அரசு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சட்ட விரோத சங்கமாக அறிவித்து, உபா சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகளுக்கு தடை செய்தது.

அந்த அமைப்பின் நிர்வாகிகள், ஆதரவாளர்கள் வீடுகளிலும் தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ஆதரவாளர்கள், தேசிய புலனாய்வு முகமையினரால் கண்காணிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் அந்த அமைப்பை சேர்ந்த 6 பேர் கேரளாவில் தலைமறைவாக இருப்பதாக என்.ஐ.ஏ.க்கு (தேசிய புலனாய்வு முகமை) ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் கொச்சியை சேர்ந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கேரளாவில் திருவனந்தபுரம், எர்ணாகுளம், திருச்சூர் மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். நள்ளிரவு முதல் அதிகாலை வரை இந்த சோதனை நடைபெற்றது.

திருச்சூர் மாவட்டம் சாவக்காட்டில் எஸ்.டி.பி.ஐ. தலைவர் ஒருவரது வீட்டில் நடைபெற்ற சோதனையில், டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் வங்கி பதிவுகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அந்த தலைவர், முன்பு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் மாவட்ட அளவிலான செயல்பாட்டாளராக பணிபுரிந்தவர் என கூறப்படுகிறது.

மாநிலம் முழுவதும் நடைபெற்ற இந்த சோதனையில் குற்றவியல் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு வெளியிட்ட செய்திக்குறிப்பில், மாநிலம் முழுவதும் 9 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் பல டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் துணை அமைப்புகளுடன் தொடர்புடைய இடங்களில் இருந்து இவை கைப்பற்றப்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளது. தடைசெய்யப்பட்ட அமைப்பு அதன் வளாகங்கள், வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகளைப் பயன்படுத்தி உடற்கல்வி, யோகா பயிற்சி மற்றும் அது போன்ற செயல்பாடுகள் என்ற போர்வையில் தேர்ந்தெடுக்கப்பட்ட போராளிகளுக்கு ஆயுதப் பயிற்சி அளித்ததாகவும் தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News