இந்தியா

சாதிய பாகுபாடுகளை களைய UGC கொண்டு வந்த விதிமுறைகளை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

Published On 2026-01-29 13:31 IST   |   Update On 2026-01-29 13:31:00 IST
  • பாகுபாடு என்பது SC, ST பிரிவினருடன் OBCவகுப்பினரையும் உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
  • கடுமையான நடவடிக்கைகள் எடுக்க UGC-க்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஜனவரி 13, 2026 அன்று உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை மேம்படுத்துவதற்கான ஒழுங்குமுறைகள் 2026 விதிகள் அறிவிக்கப்பட்டது. இந்த யுஜிசி விதிகள், உயர்கல்வி வளாகங்களில் சாதி அடிப்படையிலான பாகுபாடுகளைக் களைவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. அதாவது இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு சரியாக பின்பற்றப்படுவதில்லை எனும் குற்றச்சாட்டு நீண்டநாட்களாக எழுந்துவருகிறது. இதனை ஒழுங்குப்படுத்த தற்போது இந்த விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஒவ்வொரு அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனமும் 'சம வாய்ப்பு மையம்' (Equal Opportunity Centre) ஒன்றை அமைக்க வேண்டும் என்பது இந்த விதிகளின் ஒரு முக்கிய அம்சமாகும். அதேபோல கல்வி நிறுவனத் தலைவரின் தலைமையில் 10 உறுப்பினர்களைக் கொண்ட சமத்துவக் குழு அமைக்கப்பட வேண்டும். இக்குழுவில் குறைந்தபட்சம் 50% உறுப்பினர்கள் SC, ST, OBC, மாற்றுத்திறனாளிகள் அல்லது பெண்கள் பிரிவைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

புதிய விதிமுறைகளின் கீழ், பாகுபாடு என்பது SC, ST பிரிவினருடன் இப்போது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரையும் (OBCs) உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. புகார்களைப் பதிவு செய்ய 24 மணிநேர உதவி எண் மற்றும் ஆன்லைன் போர்டல் உருவாக்கப்பட வேண்டும். சமத்துவக் குழு புகார் கிடைத்த 24 மணிநேரத்திற்குள் கூட வேண்டும் மற்றும் 15 நாட்களுக்குள் விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்.

பாகுபாடு தொடர்பான புகார்களைக் கையாள்வதில் அந்தந்தக் கல்வி நிறுவனங்களின் தலைவர்களே இனி நேரடியாகப் பொறுப்பாவார்கள். விதிமுறைகளைப் பின்பற்றாத கல்வி நிறுவனங்களுக்கு நிதி உதவி நிறுத்தம், பட்டங்கள் வழங்கும் அதிகாரம் ரத்து அல்லது அங்கீகாரம் ரத்து போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்க UGC-க்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சாதி பாகுபாடுகளை களையும் வண்ணம் UGC அறிமுகப்படுத்திய தற்காலிகமாக விதிமுறைகளை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த UGC விதிமுறைகளை உயர்சாதியினர் எதிர்த்து வரும் நிலையில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மறு உத்தரவு வரும் வரை 2012 ஆம் ஆண்டு விதிகள் நடைமுறையில் இருக்கும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது. இந்த இடைக்காலத் தடையானது மாணவர்களுக்கோ அல்லது கல்வி நிறுவனங்களுக்கோ நிர்வாக அல்லது நடைமுறைச் சிக்கல்களை ஏற்படுத்தக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியது.

Tags:    

Similar News